நடிகர் சுதீப் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய மர்ம நபர்கள் போலி எண் பலகை பொருத்திய காரில் வந்து கடிதம் அனுப்பியது அம்பலம்
|நடிகர் சுதீப் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய மர்ம நபர்கள் போலி எண் பலகை பொருத்திய காரில் வந்து கடிதம் அனுப்பியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு:
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சுதீப். பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு 2 மிரட்டல் கடிதங்கள் வந்திருந்தது. அதில், சுதீப் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து புட்டேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டல் விடுத்த மர்மநபர்களை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தொம்லூரில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து தான் மர்மநபர்கள் தபால் மூலமாக மிரட்டல் கடிதத்தை அனுப்பி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது ஒரு காரில் வந்து மர்மநபர்கள் தபால் பெட்டிக்குள் கடிதங்களை போடுவது தெரிந்தது. அந்த காரின் மூலமாக மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அப்போது அது கெங்கேரியில் வசிப்பவருக்கு சொந்தமானது என்று தெரிந்தது. அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் அவருக்கும், நடிகர் சுதீப்புக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், அந்த நபருக்கு சொந்தமான காரின் நம்பர் பிளேட்டை மர்ம நபர்கள் தங்களது காரில் போலியாக பொருத்தி கடிதங்களை அனுப்ப பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.