வியாபாரியை அந்தரங்க உறுப்பில் தாக்கி கொன்ற கள்ளக்காதலி - பரபரப்பு தகவல்கள்
|பிரேத பரிசோதனை அறிக்கையில் கள்ளக்காதலன் அந்தரங்க உறுப்பில் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம், ஆகாஷ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவீந்திர குட்வே(வயது55), வியாபாரி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கடந்த 19-ந் தேதி வியாபாரி ரவீந்திர குட்வே, வீட்டருகே மர்மமான முறையில் இறந்துகிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் ரவீந்திர குட்வேயின் மகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த காஜல் ஜோக்(27) என்ற பெண்ணுக்கும், வியாபாரி ரவீந்திர குட்வேக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனிடையே இறந்த வியாபாரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அந்தரங்க உறுப்பில் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரது கள்ளக்காதலி காஜல் ஜோக்கை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தான் வியாபாரியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது வியாபாரியை கழட்டிவிட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்ய காஜல் ஜோக் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த வியாபாரி, கடந்த 19-ந்தேதி கள்ளக்காதலியை தனது வீட்டுக்கு வரவழைத்து திருமணம் குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த காஜல் ஜோக், வியாபாரி ரவீந்திர குட்வேயின் அந்தரங்க உறுப்பில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காஜல் ஜோக்கை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.