டெல்லி-வதோதரா விமானத்தில் வெடிகுண்டு? - பயணிகள் பீதி
|விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர்.
புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் வதோதரா நகருக்கு நேற்று இரவு விமானம் ஒன்று புறப்பட இருந்தது. விமானம் புறப்பட தயாராக இருந்த சமயத்தில், விமானத்தின் கழிவறையில் 'வெடிகுண்டு' என எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் இருந்தது தெரியவந்தது. இதனை அறிந்து பயணிகள் பீதியில் உறைந்தனர்.
இதையடுத்து உடனடியாக மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர்.
விமானம் முழுவதுமாக சோதனை செய்யப்பட்ட நிலையில், வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள் வேறொரு விமானத்தின் மூலமாக வதோதரா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விமானத்தின் கழிவறையில் உள்ள டிஷ்யூ பேப்பரில் 'வெடிகுண்டு' என எழுதியவர் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.