போலி வங்கி கணக்கு மூலம் ஆன்லைன் மோசடி...4 பேர் கைது...!
|போலியான அடையாள அட்டைகளில் வங்கி கணக்குகளை திறந்து அதனை விற்று பணம் பெறும் ஆன்லைன் மோசடி கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.
டெல்லி,
கடந்த ஜனவரி மாதம் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.61,800 காணாமல் போனதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
முதல் கட்ட விசாரணையில் பரிதாபாத்தில் இருந்து பணம் எடுத்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த பணம் புத்த விஹாரில் வசிக்கும் சுந்தர் குமார் என்பவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. சோதனையில் அது போலியான வங்கி கணக்கு தெரியவந்தது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தற்போது 4 பேர் கைதாகி உள்ளனர். கும்பலின் தலைவனான சுல்தான்புரியைச் சேர்ந்த 41 வயதான தர்வேஷ் குமார், ரோகினியைச் சேர்ந்த பிரியங்கா சர்க்கார் (24), மங்கோல்புரியைச் சேர்ந்த தீபக் (29), பரிதாபாத்தைச் சேர்ந்த அஜித் சிங் (35) ஆகியோர் ஆவர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தர்வேஷ் பணம் தேவைப்படுபவர்களிடம் இருந்து அவர்களின் அடையாள அட்டைகளை ரூ.10,000 முதல் 15,000 வரை கொடுத்து வாங்கியுள்ளார். பின்னர் அந்த ஆவணங்களில் உள்ள முகவரியை மாற்றி புதிய ஆதார் மற்றும் பான் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்கள் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை புதிய ஆதார் அட்டை பெறுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இந்த புதிய ஆதார் மற்றும் பான் கார்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு வங்கிகளில் போலி கணக்குகளை தொடங்கியுள்ளனர்.
மோசடி செய்பவர்கள் பண பரிவர்த்தனை செய்ய போலி வங்கிக் கணக்குகள் தேவைப்படும் என்பதால் இவர்கள் இதை ஒரு தொழிலாக செய்து வந்துள்ளனர். தர்வேஷ் ஒவ்வொரு வங்கிக் கணக்குகளையும் ரூ.30,000-க்கு விற்று வந்துள்ளார். இவர்கள் மோசடி கும்பலின் மூலம் பணம் பெற்றால் 10 சதவீதம் கமிஷனை வசூலித்து விட்டு மீதியை அவர்கள் கொடுக்கும் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து வந்துள்ளனர். இவ்வாறு மூன்று ஆண்டுகளாக இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.