மணல் கடத்தலை தடுக்க தவறிய அரசு அதிகாரிகள் 6 பேர் மீது வழக்கு
|ஷராவதி நீர்த்தேக்க பகுதிகளில் மணல் கடத்தலை தடுக்க தவறிய அரசு அதிகாரிகள் 6 பேர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவமொக்கா-
ஷராவதி நீர்த்தேக்க பகுதிகளில் மணல் கடத்தலை தடுக்க தவறிய அரசு அதிகாரிகள் 6 பேர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மணல் கடத்தல்
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஷராவதி அணை நீர்த்தேக்க பகுதிகளில் மணல் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஈச்சளகொப்பா, ஹரித்ராவதி, நஞ்சவள்ளி, ஏரிகே, சுத்தா, ஒன்னேகொப்பா, ராமச்சந்திரபுரா பகுதிகளில் மணல் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
அங்கு மர்மநபர்கள் எந்தவித அனுமதியும் இன்றி ஆற்று பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணலை அள்ளுகிறார்கள். இதனால் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லிங்கனமக்கி அணையின் நீர்த்தேக்க பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 லோடு மணலை போலீசார் பறிமுதல் செய்து புவியியல் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறை அதிகாரிகள்
ஆனால் இதுவரை அந்த மணலை கடத்திய நபர்கள் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த மணலை அரசு அதிகாரிகளே விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் வனப்பகுதியில் மணலை வனத்துறை அதிகாரிகள் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஷராவதி அணை நீர்த்தேக்க பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தவறிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜன சங்கரமா பரிஷத் உறுப்பினர் கிரீஸ் ஆச்சார் சிவமொக்கா லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார்.
6 பேர் மீது வழக்கு
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், ஷராவதி அணை நீர்த்தேக்க பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தவறிய கே.பி.சி.ஏ.இ.இ (கர்நாடக பவர் கார்ப்பரேஷன் துணை மின் பொறியாளர்) சிவகுமார், தலைமை கனிமவளத்துறை அதிகாரி மானச கவுடா, ஒசநகர் சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்த கோலி, சாகர் வட்டார வனத்துறை அதிகாரிகள் சஞ்சய், ராகவேந்திரா, சாகர் துணை வட்டார அதிகாரி பல்லவி சாதேனஹள்ளி ஆகிய 6 பேர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் 6 பேரிடமும் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.