மாணவர்கள் சவால்களை எதிர்கொள்ள கற்று கொடுக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல்
|மாணவர்கள் நிஜ வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள கல்வி நிலையங்கள் கற்று கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.
பட்டமளிப்பு விழா
ஆந்திராவின் அமராவதியில் உள்ள ஆசசார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழகம், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதை பெற்றுக்கொண்ட அவர், பட்டமளிப்பு விழா சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் மாணவர்களுக்கு வாழ்க்கையின் நிஜ சவால்களை எதிர்கொள்ள கற்று கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இது தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா மேலும் கூறியதாவது:-
கீழ்ப்படிதலுள்ள பணியாளர்கள்
இளைஞர்கள், வளர்ச்சியின் நிலையான மாதிரிகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய உணர்வுமிக்க மாற்றங்களை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும்.
காலனித்துவ காலத்தைப் போலவே, தேவையான முடிவுகளை உருவாக்கக்கூடிய கீழ்ப்படிதலுள்ள பணியாளர்களை உருவாக்குவதில் தொழில்முறை படிப்புகளின் கவனம் தொடர்ந்து இருக்கிறது.
மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நுழைந்த பிறகும், வகுப்பறைக் கற்றலில் கவனம் செலுத்துகிறார்களே தவிர, அதற்கு அப்பாற்பட்ட உலகத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
கல்வி ெதாழிற்சாலைகள்
அதிக ஊதியம் மற்றும் லாபகரமான வேலை வாய்ப்புகளைப் பெறுவதே இத்தகைய கல்வியின் ஒரே நோக்கமாக மாறியுள்ளது. மனிதநேயம், இயற்கை அறிவியல், வரலாறு, பொருளாதாரம் மற்றும் மொழிகள் போன்ற சமமான முக்கியமான பாடங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கை மதிப்பீடுகள் மற்றும் மனித வளங்களை மதிப்பிழக்க வழிவகுக்கும் கல்வித் தொழிற்சாலைகள் காளான்களாக வளர்ந்து வருவதை நாம் காண்கிறோம். யார், எதைக் குறை கூறுவது? என்று எனக்குத் தெரியவில்லை.
எனவே நாட்டின் கல்வி முறையின் மாற்றத்துக்கான நேரம் இது. சமூக உறவுகள் மற்றும் நனவான குடியுரிமை ஆகியவற்றின் மதிப்பில் நமது கல்வி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
விரிவான தீர்வு
நமது சமூகத்தை விழிப்புணர்வு மற்றும் சரியான புரிதலுடன் மாற்றுவதற்கு, சரியான கருவிகள் மற்றும் அணுகுமுறைகளுடன் இளம் மனதை தயார்படுத்துவதற்கு, கல்வியை எதிர்கால நோக்குடன் கலக்க வேண்டும்.
நாட்டை பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழகங்களும், அவற்றின் ஆராய்ச்சி பிரிவுகளும் கவனம் செலுத்தி, அவற்றுக்கான விரிவான தீர்வுகளை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.