தேசிய அரசியலில் தீவிரம் காட்டும் சந்திரசேகர ராவ்: அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இன்று பஞ்சாப் பயணம்..!
|சந்திரசேகர ராவ், இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பஞ்சாப் விவசாயிகளை சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி,
தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில் பாஜகவுக்கு எதிராக மத்தியில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதயுடன் பேச்சுவார்த்தை நடத்திய ராவ், தொடர்ந்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்தார். அங்குள்ள டெல்லி அரசு பள்ளி ஒன்றை பார்வையிட்டார். மேலும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சந்திரசேகர ராவ், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஆகியோருடன் இணைந்து விவசாய சட்டங்களை எதிர்த்து போராடிய பஞ்சாப் விவசாயிகளை சந்திக்க முடிவு செய்துள்ளார். அப்போது விவசாயிகளின் குடும்பங்களுக்கு சந்திரசேகர ராவ் தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வருகிற 26-ந் தேதி பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவையும் அதன்பிறகு மகாராஷ்டிராவில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவையும் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சீனாவுடனான மோதலின் போது கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சந்திக்கவும் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். இதற்காக அடுத்த வார இறுதியில் மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களுக்குச் அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளின் பிரச்சினையை தீர்ப்பதில் சந்திசேகரராவ் இரட்டை நிலை கடைப்பிடிப்பதாக தெலுங்கானா மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பேசிய தெலுங்கானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தசோசுஸ்ரவன், தனது சொந்த மாநிலத்தில் 8000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த பிறகும் சந்திரசேகரராவ் கண்ணை மூடிக் கொண்டுள்ளார் என குறிப்பிட்டார்.
விவசாயிகள் மீது அவருக்கு அக்கறை இருந்தால், மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை ஏன் முதலில் ஆதரித்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.