< Back
தேசிய செய்திகள்
இன்று தேசிய கட்சி அறிவிப்பினை வெளியிடுகிறார் சந்திரசேகர ராவ்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இன்று தேசிய கட்சி அறிவிப்பினை வெளியிடுகிறார் சந்திரசேகர ராவ்

தினத்தந்தி
|
5 Oct 2022 3:18 AM IST

தேசிய கட்சி தொடங்குவது பற்றி இன்று (விஜயதசமி) தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அறிவிக்க உள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருக்கிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்க நெருங்க அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது.

முதலில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில், தேசிய அரசியலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம், கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் குதிக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

கடந்த மாதம் 5-ந் தேதி பேசிய சந்திரசேகர ராவ், மத்தியில் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அல்லாத கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 12-ந் தேதி சட்டசபையில் பேசிய சந்திரசேகர ராவ், தேசிய கட்சி தொடங்கப் போவதாக முதல் முதலில் அறிவித்தார்.

தேசிய அளவில் கால் பதிக்கும் நோக்கத்திலும், பா.ஜனதாவுக்கு எதிராக புதிய அணி உருவாக்கும் நோக்கத்திலும் சந்திரசேகர ராவ், பிற தலைவர்களை சந்திக்க தொடங்கினார். இதன்படி பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார்.

இந்தநிலையில், தேசிய கட்சி தொடங்குவது பற்றி சந்திரசேகர ராவ் இன்று அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதராபாத்தில் நடக்க உள்ள இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சட்டமன்ற கட்சி மற்றும் மாநில செயற்குழுவின் நீட்டிக்கப்பட்ட கூட்டம் இன்று தெலுங்கானா பவனில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தேசிய கட்சியாக மாறுவது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், ஜில்லா பரிஷத் தலைவர்கள், மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்கள் என மொத்தம் 283 பேர் கலந்துகொள்வார்கள். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயரை மாற்றக் கோரிய தீர்மானம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும். மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி எந்த மாநிலத்திலும் போட்டியிடலாம். புதிய தேசிய கட்சிக்கு பாரதிய ரஷ்ட்ரீய சமிதி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

வரவிருக்கும் 2024 தேசிய தேர்தலில் அதன் செயல்திறன் அடிப்படையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தேசிய கட்சி அந்தஸ்தை பெற முடியும். அதற்கு முன்பே சட்டசபைத் தேர்தலில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆறு சதவீத வாக்குகளைப் பெற்று தேசிய கட்சி அந்தஸ்தைப் பெறலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்