< Back
தேசிய செய்திகள்
Heat Wave in North India Meteorological Department
தேசிய செய்திகள்

வட இந்தியாவில் இன்று தீவிர வெப்ப அலை நீடிக்கும் - வானிலை மையம் தகவல்

தினத்தந்தி
|
19 Jun 2024 7:49 AM IST

வட இந்தியாவில் இன்று தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும், வடகிழக்கு மத்திய பிரதேசம், வடமேற்கு ராஜஸ்தான், ஜம்மு உள்ளிட்ட இடங்களிலும் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.

பல இடங்களில் இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. மேலும் இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் வட இந்தியாவில் இன்று தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் தென்மேற்கு பருவமழை நெருங்கி வருவதால் மராட்டிய மாநிலம், சத்தீஷ்கார், ஒடிசா, ஆந்திர பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் குறைந்து மழைக்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்