< Back
தேசிய செய்திகள்
மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவி காலம் நீட்டிப்பு
தேசிய செய்திகள்

மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவி காலம் நீட்டிப்பு

தினத்தந்தி
|
5 Sep 2023 9:58 PM GMT

பதவி காலம் நிறைவடைந்தாலும் மைசூரு தசரா விழாவையொட்டி மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் மாநகராட்சி தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மைசூரு:-

மைசூரு மாநகராட்சி

பெங்களூருவுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநகராட்சியாக மைசூரு மாநகராட்சி பார்க்கப்படுகிறது. மைசூரு மாநகராட்சிக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆண்டுக்கு ஒரு மேயர், துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். மொத்தம் 65 உறுப்பினர்களை கொண்ட மைசூரு மாநகராட்சிக்கு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடந்தது.

மைசூரு மாநகராட்சி உறுப்பினர்களின் பதவி காலம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அதன்பிறகு தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடக்கும்.

இன்றுடன்...

தற்போது மைசூரு மாநகராட்சியை பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து கைப்பற்றி உள்ளன. மேயர், துணை மேயர் பதவி பா.ஜனதா வசம் உள்ளது. 5-வது மற்றும் கடைசி ஆண்டுக்கான மேயர், துணை மேயர் தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி நடந்தது. பா.ஜனதாவை சேர்ந்த சிவக்குமார் மேயராகவும், ரூபா துணை மேயராகவும் உள்ளனர். அவர்களின் பதவி காலம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைகிறது.

இவர்களின் பதவிகாலம் முடிந்த பிறகு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி, நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நீட்டிப்பு

ஆனால், உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நடக்க உள்ளதால், மேயர் சிவக்குமார், துணை மேயர் ரூபா ஆகியோரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், மைசூரு மாநகராட்சி தேர்தலுக்கான எந்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

தசரா விழா நடக்க உள்ளதால், வளர்ச்சி பணிகள் தடையின்றி நடப்பதற்காக மேயர், துணை மேயர் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தசரா விழா முடியும் வரை மேயராக சிவக்குமாரும், துணை மேயராக ரூபாவும் நீட்டிப்பார்கள்.

மேலும் செய்திகள்