மேகாலயாவில் இணைய சேவை முடக்கம் நீட்டிப்பு - காவல்துறை அறிவிப்பு
|மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷில்லாங்,
மேகாலயா மாநிலத்தில் அசாம் எல்லையையொட்டி உள்ள மேற்கு ஜெய்ன்டியா மாவட்டத்தில் கடந்த 22-ந்தேதி மரம் கடத்துவதாகக் கூறி லாரி ஒன்றை அசாம் வனத்துறையினர் தடுத்துநிறுத்தினர். இதுதொடர்பாக ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அங்கு குவிந்த மக்களுக்கும், அசாம் போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் நடந்தது.
இந்த மோதல் கலவரமாக மாறிய நிலையில், அங்கு துப்பாக்கிச்சண்டை வெடித்தது. இதில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேரும், அசாமைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இரு மாநிலங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ள நிலையில், மேற்கொண்டு வன்முறை நிகழாமல் தடுக்க மேகாலயாவில் உள்ள 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது.
இந்நிலையில் மேகாலயா காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இன்று காலை 10.30 மணி முதல் இணைய சேவை முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.