< Back
தேசிய செய்திகள்
பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி; மற்றொரு 7 நாடுகளுக்கு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி
தேசிய செய்திகள்

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி; மற்றொரு 7 நாடுகளுக்கு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி

தினத்தந்தி
|
18 Oct 2023 5:07 PM IST

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை மற்றொரு 7 நாடுகளுக்கு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் குருணை அரிசி ஏற்றுமதிக்கு தடை மற்றும் பாசுமதி அல்லாத பிற அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. இதில் இருந்து புழுங்கலரிசிக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

நெற்பயிர் விளைச்சல் சரிவை அடுத்து குறைவான உற்பத்தியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் நவம்பரில் தடை விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில், உள்நாட்டு விலையுயர்வை கட்டுப்படுத்தவும் மற்றும் உள்நாட்டு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 20-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், 2024-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை புழுங்கலரிசிக்கான 20 சதவீத ஏற்றுமதி வரி வரியை நீட்டித்து உத்தரவிட்டது.

இதற்கு முன்பு, கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி முதன்முறையாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு அக்டோபர் 16-ந்தேதி வரை அமலில் தொடர்ந்து இருந்தது.

உள்ளூரில் போதிய அளவுக்கு அரிசி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இந்த சூழலில், பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை வெவ்வேறு அளவுகளில் 7 நாடுகளுக்கு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

இதன்படி, நேபாளம் (95 ஆயிரம் மெட்ரிக் டன்), கேமரூன் (1 லட்சத்து 90 ஆயிரம் மெட்ரிக் டன்), கோட் டி ஐவர் (1 லட்சத்து 42 ஆயிரம் மெட்ரிக் டன்), கினியா குடியரசு (1 லட்சத்து 42 ஆயிரம் மெட்ரிக் டன்), மலேசியா (1 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன்), பிலிப்பைன்ஸ் (2 லட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் டன்) மற்றும் செச்சல்ஸ் (800 மெட்ரிக் டன்) ஆகிய 7 நாடுகளுக்கான ஏற்றுமதிக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அனுமதி வழங்கியிருந்தது.

அந்நந்த நாடுகளின் உணவு பாதுகாப்பு தேவைகள் மற்றும் அந்தந்த அரசுகளின் வேண்டுகோளின் அடிப்படையில் இந்த ஏற்றுமதிக்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்