காங்கிரஸ் கட்சியிலும் பாலியல் துன்புறுத்தல்கள்... குரலெழுப்பிய பெண் தலைவர் உடனடியாக நீக்கம்
|கேரளாவில் எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சிமி தெரிவித்து உள்ளார்.
கொச்சி,
கேரள திரை துறையை போன்று, காங்கிரஸ் கட்சியிலும் பாலியல் துன்புறுத்தல்கள், சுரண்டல்கள் காணப்படுகின்றன என மூத்த பெண் தலைவர் சிமி ரோஸ்பெல் ஜான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கேரளாவில் பிரதேச காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஊடகத்தின் முன்பு இருந்து கொண்டு, கட்சியின் பெண் தலைவர்களை அவமதித்ததற்காக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ரோஸ்பெல் நீக்கப்படுகிறார் என தெரிவித்து உள்ளது.
ரோஸ்பெல்லின் குற்றச்சாட்டுகள், காங்கிரசில் உள்ள லட்சக்கணக்கான பெண் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை மனதளவில் பாதிப்பு மற்றும் அவர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலான நோக்கம் கொண்டுள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
உள்ளூர் செய்தி சேனல் ஒன்றிற்கு சிமி ரோஸ்பெல் அளித்த பேட்டியின்போது, கட்சியில் முக்கிய பதவிகளில் பெண்கள் அமர வேண்டும் என்றால், திறமையும், அனுபவமும் தேவையில்லை. அவர்கள் ஆண் தலைவர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.
அவர், கேரளாவில் எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீசன் உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து உள்ளார்.
கட்சிக்குள் வாய்ப்புகளை பெறுவதற்காக பெண் உறுப்பினர்கள் அடிக்கடி சுரண்டல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். இதுபோன்ற அவருடைய கருத்துகள் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தின. அவர் ஊடகத்தில் பேசிய சில மணிநேரங்களில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து, காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி ரோஸ்பெல் கூறும்போது, கண்ணியமும், பெருமையும் கொண்ட பெண்கள் இந்த கட்சியில் வேலை செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
கேரள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் கடுமையான பாகுபாடுகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கேரள மாநில அரசு உத்தரவின் பேரில் ஆய்வு செய்த இந்த குழுவின் அறிக்கை, பல ஆண்டுகளாக வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் தடை நீங்கி இந்த அறிக்கை சமீபத்தில் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில், பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட கலைஞர்களுக்கு எதிராக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த பெண் தலைவர் பேசிய விசயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.