விசாரணை கைதிகளை விடுவிப்பதை விரைவுபடுத்த வேண்டும்; நீதிபதிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
|விசாரணை கைதிகளை விடுவிப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று நீதிபதிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
2 நாள் கூட்டம்
டெல்லியில் முதல் அனைத்து இந்திய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய 2 நாள் கூட்டம் நேற்று நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட், சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, ராஜாங்க மந்திரி பாகல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசும்போது கூறியதாவது:-
நீதித்துறையின் மீது குடிமக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எந்தவொரு சமூகத்துக்கும் நீதி வழங்குவதைப்போல நீதித்துறை அமைப்பை அணுகுவதும் முக்கியமானது.
இது சுதந்திர அமுத பெருவிழா கால கட்டம் ஆகும். இந்த நாட்டை அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய தருணம் ஆகும். எளிதாக தொழில் செய்வதும், எளிதாக வாழ்வதும் போன்று, நாட்டின் அமிர்த பயண காலத்தில் நீதியின் எளிமையும் சம முக்கியத்துவம் வாய்ந்தது.
நீதித்துறை கட்டமைப்பு
இதில் நீதித்துறை உள்கட்டமைப்பும் முக்கிய பங்களிப்பு செய்கிறது. கடந்த 8 ஆணடுகளில் நாட்டின் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக செய்யப்பட்டுள்ளன.
இ-கோர்ட்டு திட்டத்தின்கீழ், மெய்நிகர் கோர்ட்டுகள் (ஆன்லைன் கோர்ட்டுகள்) தொடங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மீறல் போன்ற குற்றங்களுக்கு கோர்ட்டுகள் 24 மணி நேரமும் செயல்படத்தொடங்கி உள்ளன. காணொலிக்காட்சி உள்கட்டமைப்பு, மக்கள் வசதிக்ககாக கோர்ட்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் காணொலிக்காட்சி வழியாக 1 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளில் விசாரணை நடந்துள்ளது. இது, நமது நீதித்துறையானது, பழங்கால இந்திய நீதி விழுமியங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதையும், அதே நேரத்தில் 21-ம் நூற்றாண்டின் உண்மைகளுடன் ஒத்துப்போகவும் தயாராகவும் உள்ளது என்பதையும் இது நிரூபிக்கிறது.
விசாரணை கைதிகளை விடுவிக்க...
விசாரணை கைதிகளைப் பொறுத்தமட்டில் மனித நேய உணர்வு வேண்டும் என்று பல தருணங்களில் சுப்ரீம் கோர்ட்டு கூறி இருக்கிறது. இத்தகைய விசாரணை கைதிகளுக்கு சட்ட உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
விசாரணை கைதிகள் தொடர்பான ஆய்வு குழுக்களின் தலைவர்கள் என்ற நிலையில், மாவட்ட நீதிபதிகள் பல்வேறு சிறைகளில் உள்ள விசாரணை கைதிகளை விடுவிப்பதை விரைவுபடுத்த வேண்டும்.
விசாரணை கைதிகளை விடுவிப்பதில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இந்த நடவடிக்கையில் பார் கவுன்சில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான வக்கீல்களை ஈடுபடுத்த வேண்டும்.
சாதாரண குடிமகன் அரசியல் சட்டம் சார்ந்த தனது உரிமைகளையும், கடமைகளையும் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதில்கூட தொழில்நுட்பம் தனது பங்களிப்பை செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.