< Back
தேசிய செய்திகள்
திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியை கைப்பற்றும் பாஜனதா - கருத்து கணிப்பில் வெளியான தகவல்
தேசிய செய்திகள்

திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியை கைப்பற்றும் பாஜனதா - கருத்து கணிப்பில் வெளியான தகவல்

தினத்தந்தி
|
27 Feb 2023 11:58 PM IST

திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜனதா ஆட்சியை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுராவில் கடந்த 16-ந் தேதியும், மேகாலயா, நாகாலாந்துக்கு இன்றும் (27-ந் தேதியும்) வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் மார்ச் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மூன்று மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இரண்டு மாநிலங்களில் பாஜனதா ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

திரிபுரா

திரிபுராவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 16ம் தேதி நடந்தது. 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடைபெற்றது. இந்தநிலையில் பாஜனதா மற்றும் கூட்டணி கட்சி 36 முதல் 45 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியந்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் - சிபிஐஎம் கூட்டணி 6 முதல் 11 இடங்களிலும், திப்ரா மோதா 9 முதல் 16 இடங்களையும் கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேகாலயா

மேகாலயாவில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. 60 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் தேர்தலில் போட்டியிடுகிறார். அதனால் தற்போதைய சூழலில் மேகாலயா சட்டமன்ற தேர்தலில் பாஜனதா, காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி, ஆளும் தேசிய மக்கள் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

மேகாலயாவில் 60 தொகுதிகள் உள்ள நிலையில், சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மீதமுள்ள 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது.

இந்தநிலையில் மேகலாயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 18 முதல் 24 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் 6 முதல் 12 இடங்களையும், பாஜனதா 4 முதல் 8 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து

நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்.டி.பி.பி.) தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில் கடந்தமுறை நாகா மக்கள் முன்னணி 26 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது.

ஆனால் என்.டி.பி.பி. 18 இடங்களிலும், பா.ஜ.க 12 இடங்களிலும் என 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த தேசியவாத ஜனநாயக முன்னணி, சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதற்குப் பிறகு நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு கூண்டோடு தாவியதால், எதிர்க்கட்சியே இல்லாத ஓர் ஆட்சியே அங்கு நடைபெறுகிறது.

இதன்படி நாகலாந்தில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என்றும், என்டிடிபி 38 - 48 தொகுதிகளிலும், என்பிஎஃப் 3 - 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 - 2 தொகுதிகளிலும் மற்றவை 5 - 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்