< Back
தேசிய செய்திகள்
ஆட்டங்காட்டும் ஆன்லைன் சூதாட்டம்-  சமூகஆர்வலர்கள், மக்கள் கருத்து
தேசிய செய்திகள்

ஆட்டங்காட்டும் 'ஆன்லைன்' சூதாட்டம்- சமூகஆர்வலர்கள், மக்கள் கருத்து

தினத்தந்தி
|
28 Nov 2022 8:59 PM GMT

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோர் கைகளில் ‘ஸ்மார்ட் போன்'கள் தவழ்கின்றன. பலரும் ‘ஆன்லைன்’ விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டம்

'ஆன்லைன்' விளையாட்டுகளில் திறமைக்கு சவால்விடும் வகையில், பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், அதில் 'ரம்மி' போன்ற சூதாட்டம் புகுந்து, விளையாடுகிறவர்களின் மனங்களை மசியம் செய்து மயக்குவதுடன், பண ஆசைகாட்டி இழுக்கிறது.

இந்த விளையாட்டுகளில் பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த நிறுவனங்களே எச்சரிக்கை விடுத்தாலும், 'எப்படியும் ஒருமுறை வெற்றி பெற்றுவிடலாம். இழந்த பணத்தை மீட்டுவிடலாம்' என்ற நம்பிக்கை வெறியோடு பலர் பணத்தை இழந்து வருகிறார்கள்.சேமித்த பணத்தை இழந்து கடனாளியானவர்கள் தற்கொலை முடிவை தேடுகிறார்கள்.

தடை விதித்த அரசு

அதுபோல் பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூதாட்டங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்தவர்கள் வீதிக்கு வந்தனர். பணத்தை இழந்த சிலர் தற்கொலை செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு சில போலீஸ்காரர்களும் பணத்தை இழந்தார்கள். கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, அதற்கு தடை விதிக்க பல்வேற தரப்பினரும் வலியுறுத்தினார்கள்.

இதையடுத்து, கர்நாடசு அரசும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. இதற்காக கர்நாடகத்தில் போலீஸ் சட்டத்தில் (2021) திருத்தம் செய்யப்பட்டது. அதாவது ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் விதமாக இந்த போலீஸ் சட்டம் இருந்தது. இந்த புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னரும் ஒப்புதல் வழங்கினார். கர்நாடக சட்டசபை மற்றும் மேல்-சபையிலும் இந்த புதிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக ஐகோர்ட்டு ரத்து

அதைத்தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு தடை விதித்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசு சென்றுள்ளது.

அதே நேரத்தில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூதாட்டத்தில் விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதாரண தொழிலாளர்களில் இருந்து படித்த இளைஞர்கள் மற்றும் வசதிப்படைத்தவர்களும் பணத்தை இழந்து வருகிறார்கள். பல குடும்பங்கள் வீதிக்கும் வந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுபற்றி சட்ட வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும், ஆன்லைன் சூதட்ட பாதிப்புகள் குறித்து உணர்ந்தவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்

பெங்களூரு ஒயிட்பீல்டு, நெல்லூரஹள்ளியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சந்திரசேகரன் கூறும்போது, "மனிதர்கள் மத்தியிலும், ஆன்லைனிலும் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாட்டுக்கு இருக்கும் திறன், சாதாரண மனிதர்களுக்கு இருக்காது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு மக்கள் பணத்தை இழந்து, உயிர் இழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த விளையாட்டுக்கு அரசு பிறப்பித்த தடையை கர்நாடக ஐகோர்ட்டு நீக்கி இருக்கிறது.

எனவே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாட சில வரையறைகளை அரசும், கோர்ட்டும் பிறப்பிக்க வேண்டும். வயது வரம்பு நிர்ணயிப்பது, குறிப்பிட்ட பணத்தை கட்டி மட்டுமே விளையாட வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு வரையறுக்கும் போது பணத்தை இழப்பது குறைந்து, மக்களை காப்பாற்ற முடியும். என்றாலும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் மக்கள் பாதிக்கப்படுவதால், அதற்கு நிரந்தரமாக தடை விதிப்பது சரியான தீர்வாக இருக்கும்"என்றார்.

மீண்டும் தடை விதிக்க வேண்டும்

இதுகுறித்து பெங்களூரு உஸ்கூர் மார்க்கெட் பழ வியாபாரிகள் சங்க தலைவர் வெங்கடேஷ் கூறுகையில், "ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் கடன் வாங்குகிறார்கள். அந்த கடனை திரும்ப கொடுக்க முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை விதித்திருந்தது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு எடுத்து நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

தற்போது அந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் மக்கள் பாதிக்கப்படுவதால், மீண்டும் தடைவிதிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் சீரழைக்கும் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்ந்து செயல்பட அரசு அனுமதி அளிக்க கூடாது" என்றார்.

எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசை

இதுபற்றி ஹாசனை சேர்ந்த ஆசிரியரான கவுரம்மா கூறுகையில், "தற்போது மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளனர். முதலில் ஆன்லைனில் பணம் இல்லாமல் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அந்த விளையாட்டுக்கு அடிமையாகி பணம் வைத்து சூதாடுவதுடன், வேலைக்கு எங்கும் செல்லாமல் எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட தொடங்குகிறார்கள்.

ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடினாலே, போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இளைஞர்கள், பட்டதாரிகளை பெரிதும் பாதிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும். அப்போது தான் இளைஞர்களை பாதுகாக்க முடியும்" என்றார்.

மங்களூரு டவுன் கத்ரி பகுதியை சேர்ந்த வியாபாரி த.ஜெயப்பிரகாஷ் என்பவர் கூறுகையில், "ஆன்-லைன் சூதாட்டத்தில் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கஷ்டப்பட்டு உழைத்து சேமிக்கும் பணமே கரைந்து போய்விடுகிறது. இதில் ஆன்லைன் சூதாட்டம் போன்ற குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்து சேமித்த பணத்தையும் பலர் இழந்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு செலவிடும் பணத்தை காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்குவது போன்ற பயன் உள்ள விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை உணர வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம். அதுபோல் மத்திய அரசும் நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தடை விதிக்க கூடாது

சித்ரதுர்கா டவுனை சேர்ந்த கணேஷ் என்பவர் கூறுகையில், "ஆன்லைன் சூதாட்டம் என்பது நான் ஆன்லைனில் சீட்டு விளையாடும் பட்சத்தில் பத்து ரூபாய் இருபது ரூபாய் 50 ரூபாய் என ஒரு சிறிய முதலீட்டை வைத்து நான் விளையாடுவதால் எனக்கு இதில் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. குறிப்பாக என் முதலீட்டை விட நான் இதுவரை சுமார் ஆயிரம் ரூபாய் அதிகமாக லாபத்தை சம்பாதித்துள்ளேன். குறுகிய முதலீட்டில் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக லாபம் சம்பாதித்தது. சிறு, சிறு அத்தியாவசிய தேவைகளுக்கு அந்த பணம் பயன்படுகிறது. ஆகையால் எக்காரணத்தை கொண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை அரசு தடை செய்யக்கூடாது. அதை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்" என கூறினார்.

மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்

இதுபற்றி பெங்களூருவை சேர்ந்த வக்கீல் கீதா கூறும் போது, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்த சிலர், என்னை சந்தித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பணத்தை பெற்று விடலாமா? என்று கேட்டார்கள். பணத்தை இழந்தவர்கள் வீதிக்கு வந்துள்ளனர். பணம் இழந்தால் திரும்ப பெற முடியாது. சிகரெட், மதுஅருந்த கூடாது என்று உடல் நலத்திற்கு கேடு என்று சொல்லியும், மக்கள் அதனை விடுவதில்லை.

அதுபோல், ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து விடுவீர்கள் என்று எச்சரித்த பின்பும் விளையாடுகிறார்கள். மக்கள் தான் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் பாதிக்கப்படுவதால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும், என்றார்.

பெங்களூருவில் முதல் வழக்குப்பதிவு

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 5-ந் தேதி ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அக்டோபர் 7-ந் தேதி பெங்களூரு அன்னபூர்னேஷ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தின் மீதும், இயக்குனர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதே நேரத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு விதித்த தடையை கர்நாடக ஐகோர்ட்டு, கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்திருந்தது.

3 ஆண்டு வரை சிறை தண்டனை

கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் விதமாக கர்நாடக போலீஸ் சட்டம் (2021) திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, தடையை மீறி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு இருந்தது. அத்துடன் அந்த சட்டம் மூலமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்