< Back
தேசிய செய்திகள்
Arvind Kejriwal judicial custody extend

File image

தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தினத்தந்தி
|
8 Aug 2024 5:37 PM IST

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

இதையடுத்து, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும் சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றோடு நிறைவடைந்த நிலையில், அவர் இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை வரும் 12ம் தேதி கோர்ட்டு பரிசீலிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்