< Back
தேசிய செய்திகள்
2,000 ரூபாய் நோட்டுகளை நாளை முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் - ரிசர்வ் வங்கி கவர்னர்
தேசிய செய்திகள்

2,000 ரூபாய் நோட்டுகளை நாளை முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் - ரிசர்வ் வங்கி கவர்னர்

தினத்தந்தி
|
22 May 2023 12:02 PM IST

ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறை தான் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி (நாளை) முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் ஒரு நபர் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.

கோடைக் காலம் என்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் வசதி, காத்திருப்பு அறை, நிழலில் காத்திருக்கும் வசதிகளை வழங்க வேண்டும் என்றும் ரூ.2000 நோட்டுகள் குறித்த அன்றாட தரவுகளை பராமரிப்பதோடு, கேட்கும் போது விவரங்களை வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.2000 நோட்டுகளை வழங்குவதற்கான படிவத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில்,

"ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறை தான். ரூ.1000, ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் உடனடி தேவைக்காக ரூ.2,000 நோட்டுகள் வழங்கப்பட்டன. உயர்மதிப்புள்ள ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை. ரூ.2,000 நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நோட்டுகள் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியை முடித்துவிட்டன. இது ரிசர்வ் வங்கியின் கரன்சி மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பதை தெளிவுபடுத்துகிறேன். 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்