< Back
தேசிய செய்திகள்
கடின உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?; பயிற்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் கருத்து
தேசிய செய்திகள்

கடின உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?; பயிற்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் கருத்து

தினத்தந்தி
|
9 Jun 2023 2:35 AM IST

கடின உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து பயிற்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

உடற்பயிற்சி...

என்ற வார்த்தையை கேட்கும் போதே சிலருக்கு அளவு கடந்த உற்சாகமும், சிலருக்கு சிறிதளவு தயக்கமும் உண்டாகும். ஏனெனில் உடலை மேம்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இயல்பாக இருக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் அதனை அடையும் பொருட்டு சிலர் அதற்கான வழிமுறையை சரியாக பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக உடலில் சிறு காயங்கள் முதல் எலும்பு முறிவு உள்ளிட்ட பெரிய அளவிலான பாதிப்புகளும் உண்டாகின்றன. சில நேரங்களில் இதனால் உயிரிழப்பும் நடந்து வருவது அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகவே உள்ளது.

ஆம்... தற்போது முறையான வழிகாட்டுதல் மற்றும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் தனது உடல் நிலைக்கு ஏற்றவாறு உடற்பயிற்சியை எடுத்து கொள்ளாமல் சிலர் உயிரிழப்பை சந்திக்கின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு ஓட்ட பயிற்சியில் ஈடுபட்ட போது பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இது நாட்டின் அனைத்து மக்களிடமும் பேசு பொருளாகியது. மேலும் பெங்களூருவில் உடற்பயிற்சி கூடமே கதியே என்று இருந்தவர்களும், குறுகிய காலத்திலேயே உடற்கட்டை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்று கருதி ஊக்கமருந்துகள், ஊசிகள் மூலம் உடற்கட்டு பெற முயற்சித்தவர்கள் என 8-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

இதேபோல் சமீபத்தில் கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த ஆணழகன் போட்டிக்கு சென்ற சேலத்தை சேர்ந்த ஹரிகரன் என்ற 21 வயது வாலிபர், பயிற்சி எடுத்த நில நிமிடங்களில் திடீரென மரணம் அடைந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் கட்டுடல் கொண்டுவருவதற்காக 'ஸ்டீராய்டு' ஊசி பயன்படுத்தியதால் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.

உடற்பயிற்சி செய்யும் போது இப்படி உயிரிழப்புகள் நடப்பதற்கு காரணம் என்ன?... தற்போதைய சூழலில் இது தொடர் கதையாகி வருவது ஏன்? என்பது குறித்து உடற்பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

புகையிலை பயன்படுத்த கூடாது

பெங்களூரு ராமசந்திராபுரம் கங்கம்மா சர்க்கிள் பகுதியை சேர்ந்த ஆணழகன் பட்டம் வென்றவரும், உடற்பயிற்சியாளருமான முகமது இஸ்மாயில் கூறுகையில், தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த நான் 30 ஆண்டுக்கு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து வீட்டு சாதன பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு உடற்பயிற்சியில் மிகவும் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி செய்து வந்தேன். இதன் பலனாக கட்டுப்கோப்பான உடற்கட்டை பெற்றேன். சுமார் 10 ஆண்டுக்கு முன்பு வரை பலமுறை ஆணழகன் போட்டியிலும் கலந்து கொண்டு பரிசுகளை வாங்கி உள்ளேன். நிரந்தரமாக நான் உடற்பயிற்சியை செய்து வருகிறேன். உடற்பயிற்சி செய்கிறவர்கள் மது, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்த கூடாது. அதுபோல் உடற்கட்டை பெற ஊக்கமருந்து மற்றும் ஊசி போடுவது போனற செயல்களில் ஈடுபடக் கூடாது. இதுபோன்ற பழக்கவழக்கங்களாலும், அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதாலும் மாரடைப்பு ஏற்படுகிறது.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக குறைந்த அளவு தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தற்போதும் நான் கட்டுக்கோப்பாக உடலை வைத்து இருப்பதால் பவுன்சராக பணியாற்றி வருகிறேன். நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி அவசியம் தேவை. ஆனால் உடற்பயிற்சியை நம்மை அழித்துக் கொள்ளும் அளவிற்கு மிகவும் வருத்தி செய்யக்கூடாது. உடற்பயிற்சி என்பது நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டாலே ஆணழகன் தான் என்றார்.

ஆபத்தானது அல்ல

சிவமொக்கா வினோபா நகரில் உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் சரவணன் கூறுகையில், உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளை போலவே உடற்பயிற்சி நிலையமும் கூட. உடற்பயிற்சி செய்த சிலர் இறந்துபோனதால், உடற்பயிற்சி ஆபத்தானது என்று தவறான கருத்து பொதுவாக நிலவுகிறது. இது தவறு. ஸ்கூட்டர் ஓட்டவும், சைக்கிள் ஓட்டவும் கற்றுக்கொள்ளும் போது கீழே விழுந்து சிறு, சிறு அடிபடுவது இயல்புதான். அதற்காக நாம் சைக்கிள், ஸ்கூட்டர் ஓட்டுவதை கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டோமா?.

கிரிக்கெட், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜல்லிக்கட்டு, மாடு பிடித்தல், ஓட்டப்பந்தயம், கபடி போன்ற விளையாட்டுகளைப் போலவே வலிமையான, ஆரோக்கியமான கட்டுமஸ்தான உடலை பெற இளைஞர்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு வருகிறார்கள். இந்தப் பயிற்சியில் ஈடுபடுவது ஆபத்தானது அல்ல. முறையாக படிப்படியாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடலை வருத்திக்கொள்ள கூடாது. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் இடையே தன்னம்பிக்கை வளரும். ஏதாவது நோய்கள் இருந்து உடலை வருத்தி உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது. இதுபோன்ற சம்பவங்களால் தான் சிலர் இறந்துள்ளனர். அதற்காக ஒட்டுமொத்தமாக உடற்பயிற்சி செய்வதால் ஆபத்து என பொத்தம் பொதுவாக கூற கூடாது என்றார்.

மருந்துகளை உட்கொள்ள கூடாது

மைசூருவை சேர்ந்த உடற்பயிற்சி கூடத்தில் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் சேகர் கிருகுந்தா கூறுகையில், உடற்பயிற்சி கூடங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தான் செயல்படுகிறது. அதாவது காலை, மாலை தலா அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் போதும். உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வதே உயிருக்கு உலையாகிவிடுகிறது. அதுபோல் குறுகிய காலத்திலேயே உடற்கட்டை பெற சிலர் தவறான வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்கள். இதனால் அவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மேலும் சிலர் இதயகோளாறு பிரச்சினை இருப்பதை தெரியாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் உயிரிழக்க நேரிடும். இதுபோன்றவற்றை தவிர்த்து சரியான முறையை கடைப்பிடித்து உடற்பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்றார்.

மைசூருவை சேர்ந்த உடற்பயிற்சியாளர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், உடற்பயிற்சியை எவ்வளவு நேரம் மேற்கொள்ள வேண்டும் என்ற முறை உள்ளது. அதன்படி தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முன்பு ராணுவம், போலீஸ் பணிக்கு செல்பவர்கள் தான் உடற்பயிற்சி மேற்கொண்டனர். மேலும் ஆணழகன் போட்டியில் பங்கேற்பவர்களும் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இன்று அதிகளவில் இளைஞர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயிற்சி பெறுகிறார்கள். அவர்களுக்கு நான் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யக்கூடாது, உடம்புக்கு பாதிப்பு ஏற்படும், காலை அரை மணி நேரம் மாலை அரை மணி நேரம் மட்டும்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கி வருகிறேன். அதுபோல் உடலை கட்டுப்கோப்பாக வைப்பதற்காக மருந்துகளை உட்கொள்வதையும், ஊசிபோடுவதையும் செய்யக்கூடாது. இது உயிருக்கே உலைவைக்கும். எனவே முறையான உடற்பயிற்சி செய்தால் ஆபத்து இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும் என்றார்.

மங்களூரு டவுன் கோடிக்கல் பகுதியை சேர்ந்த உடற்பயிற்சியாளர் சரவணன் கூறுகையில், இன்றைய நவநாகரீக உலகில் மனிதனின் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. இதனால் உடற்பயிற்சி அவசியமாகிவிட்டது. தினமும் அரை மணி நேரம் மட்டும் உடற்பயிற்சி செய்தால் போதும். உடல் ஆரோக்கியத்தை காக்கிறேன் என கூறி உடற் பயிற்சி செய்தால் உடலை பாதிக்கும். மேலும் உயிரை பறித்துவிடும். எனவே எளிமையான உடற்பயிற்சி செய்தால் போதும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலை வருத்தி உடற்பயிற்சி செய்தால், நமக்கு தான் பிரச்சினை ஏற்படும் என்றார்.

இதய பரிசோதனை

இதுகுறித்து பெங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்த மருத்துவ நிபுணர் ஒருவர் கூறுகையில், இன்றைய தலைமுறை இளைஞர்களில் பெரும்பாலானோர் தங்களது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள பல்வேறு வகைகளில் முயற்சி மேற்கொள்கின்றனர். அதில் முறையான பயிற்சி இன்றி ஒருவர் திடீரென உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, அதிகப்படியான எடையை தூக்கினால் உடனே அவருக்கு இதய துடிப்பு அதிகமாகி திடீர் இதய இறப்பு (சடன் ஹார்டியாக் டெத்) ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சிலருக்கு பெமிலியல் ஹைப்பர் கொலஸ்ட்ரால் லிமியா என்ற இதய வால்வுகளில் கொழுப்பு படிதல் இயற்கையாகவே இருக்கும். அந்த சமயங்களில் உடற்பயிற்சி மையங்களுக்கு சென்று அதிக எடையை உடனே தூக்கும்போது அதிகப்படியாக அழுத்தத்தால் ரத்த குழாய் கொழுப்பு அடைப்பானது திடீரென வெடித்து விடும். இதனால் கூட மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உடற்பயிற்சிக்கு செல்லும் முன்பு இதய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

மேலும் செய்திகள்