கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு முறையில் மாற்றம்
|கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு முறையில் கர்நாடக அரசு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற 2 முறை தேர்வுகள் எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு முறையில் கர்நாடக அரசு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற 2 முறை தேர்வுகள் எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
துணைத்தேர்வு
கர்நாடகத்தில் தற்போது எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு 2 முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதாவது ஆண்டு இறுதியில் பொதுத்தேர்வும், அதில் தோல்வி அடைகிறவர்களுக்கு உடனே வாய்ப்பு அளிக்கும் வகையில் துணைத்தேர்வும் நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் துணைத்தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதி வெற்றி பெற்று தங்களின் அடுத்த கல்வியை தடையின்றி தொடர முடியும்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் தற்போது, மேலும் ஒரு தேர்வு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது 3-வது தேர்வும் நடத்தப்படுகிறது. அதில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமின்றி வெற்றி பெற்றவர்களும் அதிக மதிப்பெண் பெறுவதற்காக தேர்வு எழுதலாம். இந்த புதிய தேர்வு முறையால் மாணவர்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கும். இதுகுறித்து கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தேர்ச்சி பெறலாம்
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு 3 தேர்வுகள் முறை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தேர்வு-1, தேர்வு-1, தேர்வு-3 என்று 3 தேர்வுகள் நடத்தப்படும். நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த முறை அறிமுகம் செய்யப்படுகிறது. மாணவர்கள் முதல் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் 2-வது தேர்வை எழுதலாம். அதிலும் திருப்தி இல்லையெனில் 3-வது தேர்வை எழுத முடியும்.
ஒருவேளை 2, 3-வது தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக வந்தால், முதல் தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் மீண்டும் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற நினைத்தால், அவர் 2, 3-வது தேர்வை எழுதலாம். முதல் தேர்வில் ஒரு மாணவர் தோல்வி அடைந்தால், அவரை தோல்வி அடைந்தவர் என்று கூற முடியாது. அவர் 2, 3-வது தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம்.
கால அட்டவணை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணையையும் முடிவு செய்துள்ளோம். அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. முதல் தேர்வு மார்ச் மாதம் 31-ந் தேதி முதல் ஏப்ரல் 15-ந் தேதி வரையும் நடைபெறும். இதன் தேர்வு முடிவு மே 8-ந் தேதி வெளியிடப்படும். 2-வது தேர்வு ஜூன் 12-ந் தேதி முதல் அதே மாதம் 19-ந் தேதி வரை நடைபெறும். இதன் முடிவு ஜூன் 29-ந் தேதி வெளியிடப்படும். 3-வது தேர்வு ஜூலை 29-ந் தேதி முதல் ஆகஸ்டு 5-ந் தேதி வரை நடைபெறும். இதன் முடிவு ஆகஸ்டு 19-ந் தேதி வெளியிடப்படும்.
அதே போல் பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கு முதல் தேர்வு மார்ச் 1-ந் தேதி முதல் 25-ந் தேதி வரைக்கும், 2-வது தேர்வு மே 15-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரைக்கும், 3-வது தேர்வு ஜூலை 12-ந் தேதி முதல் 30-ந் தேதி வரைக்கும் நடைபெறும். முதல் தேர்வு முடிவு ஏப்ரல் 22-ந் தேதியும், 2-வது தேர்வு முடிவு ஜூன் 21-ந் தேதியும், 3-வது தேர்வு முடிவு ஆகஸ்டு 16-ந் தேதியும் வெளியிடப்படும்.
இவ்வாறு மது பங்காரப்பா கூறினார்.