< Back
தேசிய செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை முன்னாள் செயலருக்கு சிறை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை முன்னாள் செயலருக்கு சிறை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

தினத்தந்தி
|
2 Aug 2023 10:19 PM IST

பள்ளிக்கல்வித்துறை முன்னாள் செயலருக்கு சிறை தண்டனை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை.

இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ம் ஆண்டு ஞானப்பிரகாசம், ஐகோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அப்போதைய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு கடந்த மாதம் 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அப்போது, ஐகோர்ட்டு உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என அவர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் சரியாக இருக்கும் என்று கூறினார்.

இந்நிலையில் இவ்வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத பள்ளிக் கல்வித்துறை முன்னாள் செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் 2 கல்வித்துறை அதிகாரிகளுக்கு 2 வார சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் வரும் 9ஆம் தேதி ஐகோர்ட்டு மதுரை கிளை பதிவாளர் முன் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்