ஓய்வுபெற்றாலும் மன்மோகன் சிங் எப்போதுமே கதாநாயகன்தான் - மல்லிகார்ஜுன கார்கே
|மன்மோகன் சிங் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 33 ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்திய பொருளாதாரத்தில் பல துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளை ஏற்படுத்தியதற்காக அறியப்பட்ட மன்மோகன்சிங், 1991 அக்டோபரில் முதல்முறையாக எம்.பி. ஆனார். நரசிம்மராவ் அரசாங்கத்தில் 1991-96 வரை நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 வரை பிரதமராகவும் இருந்தார்.
91 வயதாகும் மன்மோகன்சிங், இன்று தனது பதவி காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெறுகிறார்.அவரது 33 ஆண்டு கால பதவி இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அதன்பிறகு காலியாக இருக்கும் இடத்தை நிரப்புவதற்காக சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து முதல்முறையாக மேல்சபைக்கு தேர்வு பெற்றுள்ளார். மன்மோகன் சிங் தனது பதவி காலத்தின் ஓய்வு குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில்,
மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து மன்மோகன் சிங் ஓய்வுபெறுவதன் மூலம், ஒரு சகாப்தம் நிறைவு பெற்றுள்ளது. அவர் ஓய்வுபெற்றாலும், நடுத்தர மக்களுக்கும், இளைஞர்களுக்கும் எப்போதுமே கதாநாயகனாகவே திகழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போதைய அரசாங்கத்தால் செயல்படும் திட்டங்கள், காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்று பெருமையாக கூறியுள்ளார்.