< Back
தேசிய செய்திகள்
முன்னாள் மாடல் அழகி கொலை: பிஎம்டபிள்யூ காரில் உடலை கொண்டு சென்ற குற்றவாளிகள் - சிசிடிவி காட்சி வெளியீடு
தேசிய செய்திகள்

முன்னாள் மாடல் அழகி கொலை: பிஎம்டபிள்யூ காரில் உடலை கொண்டு சென்ற குற்றவாளிகள் - சிசிடிவி காட்சி வெளியீடு

தினத்தந்தி
|
3 Jan 2024 7:51 PM IST

திவ்யாவின் உடலை அப்புறப்படுத்த தனது நண்பர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

குருகிராம்,

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு ஹோட்டலில் 27 வயது பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். திவ்யா பஹுஜா என்ற மாடல் அழகி ,கொலை நடந்த ஹோட்டலின் உரிமையாளரான அபிஜீத் சிங்கால் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைக்கு காரணமாக இருந்த ஹோட்டல் நிர்வாகி உள்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளர் அபிஜீத் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகவும், பின்னர் திவ்யாவின் உடலை அப்புறப்படுத்த தனது நண்பர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அபிஜீத் உள்ளிட்ட கொலைக் குற்றவாளிகள் நீல நிற பிஎம்டபிள்யூ காரில் திவ்யாவின் உடலை போர்வையில் சுருட்டிக்கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

சிசிடிவி காட்சிகள், அபிஜீத், இளம் பெண் மற்றும் மற்றொரு நபர் நேற்று ஹோட்டல் வரவேற்பறைக்கு வந்து அறை எண் 111 க்கு செல்வதைக் காட்டுகிறது. பின்னர், அதே இரவில், அபிஜீத் அவரது நண்பர்கள் இருவர் திவ்யாவின் உடலை ஒரு போர்வையில் சுற்றப்பட்டு எடுத்துசெல்வதை காட்டுகிறது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபரிடம் குருகிராம் போலீசார் விசாரித்து வருகின்றனர். திவ்யாவின் உடலை கண்டுபிடிக்க பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடி வருகின்றனர்.

திவ்யாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹோட்டல் உரிமையாளர் அபிஜீத் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோட்டலில் மாடல் அழகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்