டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு செப்டம்பர் 12-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!
|டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு செப்டம்பர் 12-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது மந்திரி சபையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.
இவர் சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போதில் இருந்து டெல்லி திகார் சிறையில் உள்ளார். இந்த நிலையில், உடல் நிலை காரணமாக சத்யேந்திர ஜெயின் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடைந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.கே.மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உடல்நிலை காரணமாக சத்யேந்திர ஜெயினின் இடைக்கால ஜாமீனை செப்டம்பர் 12-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.