மருத்துவமனையில் உள்ள உறவினரை சந்திக்க உப்பள்ளி செல்ல காங்கிரஸ் முன்னாள் மந்திரிக்கு அனுமதி; பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
|மருத்துவமனையில் உள்ள உறவினரை சந்திக்க உப்பள்ளிக்கு செல்ல காங்கிரஸ் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு அனுமதி வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உப்பள்ளி:
வினய் குல்கர்னி கைது
தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த பா.ஜனதாவை சேர்ந்த லோகேஷ் கவுடா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சி.பி.ஐ. போலீசார், லோகேஷ்கவுடா கொலை வழக்கு தொடர்பாக வினய் குல்கர்னியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வினய் குல்கர்னி, ஜாமீன் கேட்டு தார்வார் கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டில் பலமுறை மனுதாக்கல் செய்தும், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் மனு
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினய் குல்கர்னிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், தார்வார்-உப்பள்ளிக்கு செல்ல வினய் குல்கர்னிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் உப்பள்ளிக்கு வராமல் இருந்தார். இந்த நிலையில் உப்பள்ளியில் உள்ள அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை சந்திக்க உப்பள்ளி செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், 3 நாட்கள் அங்கு தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் வினய் குல்கர்னி தரப்பில் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
உப்பள்ளி செல்ல அனுமதி
இந்த மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வினய் குல்கர்னி உப்பள்ளி செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதாவது, உப்பள்ளியில் 3 மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அரசியல் நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிட்டார்.