< Back
தேசிய செய்திகள்
வேலை தருவதாக கூறி பெண்ணை கற்பழித்த வழக்கு: அந்தமான் தலைமைச் செயலாளரிடம் 7 மணி நேரம் விசாரணை
தேசிய செய்திகள்

வேலை தருவதாக கூறி பெண்ணை கற்பழித்த வழக்கு: அந்தமான் தலைமைச் செயலாளரிடம் 7 மணி நேரம் விசாரணை

தினத்தந்தி
|
29 Oct 2022 4:25 AM IST

பெண்ணை கற்பழித்த வழக்கு தொடர்பாக, அந்தமான் தலைமைச் செயலாளரிடம் சிறப்பு புலனாய்வு குழு 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.

போர்ட் பிளேர்,

வேலை தருவதாக ஆசை காட்டி பெண்ணை, மற்றொரு அதிகாரியுடன் சேர்த்து கற்பழித்த குற்றச்சாட்டில் அந்தமான் முன்னாள் தலைமைச்செயலாளரிடம் சிறப்பு விசாரணை குழு 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது.

அந்தமான் நிகோபர் யூனியன் பிரதேசத்தின் தலைமைச்செயலாளர் பதவி வகித்த ஜிதேந்திர நரைன் மீது பரபரப்பான கூட்டு பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்து.

இது தொடர்பாக 21 வயதான ஒரு இளம்பெண் போலீசில் அளித்த புகார் மனு, அந்த யூனியன் பிரதேசத்தையை உலுக்கியது. அதில் அவர் கூறி இருந்ததாவது:-

எனக்கு தாய் இல்லை. என் தந்தையும், சித்தியும் என்னை கவனிப்பதில்லை. எனக்கு ஒரு வேலை தேடிக்கொண்டாக வேண்டும் என்ற நிலை வந்தது. என்னை அரசு தலைமைச்செயலாளருக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்ட தொழிலாளர் நல கமிஷனரிடம் சிலர் அறிமுகம் செய்தனர்.

பல்வேறு துறைகளில் எந்தவித முறையான நேர்முகத்தேர்வும் இல்லாமல் சிபாரிசின் அடிப்படையில் 7,800 பேரை தலைமைச்செயலாளர் பணி நியமனம் செய்ததாக என்னிடம் சொன்னார்கள்.

என்னை ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மற்றும் மே மாதம் 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வேலை வாங்கித்தருவதாக கூறி தலைமைச்செயலாளர் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்கள். அங்கு தலைமைச்செயலாளரும், தொழிலாளர் நல கமிஷனர் ஆர்.எல்.ரிஷியும் என்னை மாறி மாறி கற்பழித்து விட்டனர்.

இவ்வாறு அவர் தனது புகாரில் குண்டைத்தூக்கி போட்டிருந்தார். இதில் ஓட்டல் அதிபர் ஒருவரும், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

வழக்குப்பதிவும், இடைநீக்கமும்

இது தொடர்பாக போலீசார் கடந்த 1-ந் தேதி, தலைமைச்செயலாளர் ஜிதேந்திர நரைன், தொழிலாளர் நல கமிஷனர் ரிஷி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஓட்டல் அதிபரும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் தலைமைச்செயலாளர் ஜிதேந்திர நரைன், டெல்லி நிதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். ஆனால் இந்த வழக்கால் அவர் 17-ந் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இடைக்கால ஜாமீன்

18-ந் தேதியன்று, அந்தமான் நிகோபார் உயர் போலீஸ் அதிகாரிகள் குழு, போர்ட் பிளேரில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர் இடைக்கால ஜாமீன் கேட்டு, டெல்லி ஐகோர்ட்டை நாடினார். அங்கு அக்டோபர் 28-ந் தேததி (நேற்று) வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் கொல்கத்தா ஐகோர்ட்டை நாடினார். அங்கு அடுத்த மாதம் 14-ந் தேதி வரை அவரை கைது செய்யாமல் இருக்க ஐகோர்ட்டு தடைவிதித்தது.

இந்த வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

7 மணி நேரம் கிடுக்கிப்பிடி

அந்த குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் நேற்று போர்ட் பிளேர் சென்றனர். அங்குள்ள போலீஸ் லைனுக்கு ஜிதேந்திர நரைன் அழைத்து வரப்பட்டார். அங்கே இன்னொரு புறம் அவருக்கு எதிராக போராட்டமும் நடந்து கொண்டிருந்தது. போராட்டக்காரர்கள் கைகளில் சிக்கி விடாமல் அவர் பாதுகாப்புடன் பின்புற வாசல் வழியாக அழைத்துச்செல்லப்பட்டார்.

அவரிடம் சிறப்பு புலன்விசாரணை குழுவினர் 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் துருவித்துருவி கேட்டு, பதில்களைப் பதிவு செய்தனர்.

இதனால் நேற்று அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும் செய்திகள்