< Back
தேசிய செய்திகள்
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.பி. தரம்வீர் காந்தி காங்கிரசில் இணைந்தார்
தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.பி. தரம்வீர் காந்தி காங்கிரசில் இணைந்தார்

தினத்தந்தி
|
1 April 2024 3:55 PM IST

தரம்வீர் காந்தி தனது கட்சியான நவன் பஞ்சாப் கட்சியையும் காங்கிரசில் இணைத்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேவேளை பல கட்சி உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சி மாறியும், தங்களது பதவியை ராஜினாமா செய்வதுமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.பி. தரம்வீர் காந்தி இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி தலைவர்களான பவன் கேரா மற்றும் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் தேவேந்திர யாதவ், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங் மற்றும் சி.எல்.பி. தலைவர் பிரதாப் சிங் பஜ்வா ஆகியோர் தரம்வீர் காந்தியை கட்சிக்குள் வரவேற்றனர்.

தரம்வீர் காந்தி 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராக பாட்டியாலா தொகுதியில் இருந்து பிரனீத் கவுரை தோற்கடித்து வெற்றி பெற்றார். பின்னர் 2016ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி நவன் பஞ்சாப் கட்சி என்ற தனக்கென சொந்த கட்சியை உருவாக்கினார், அந்த கட்சியையும் இன்று காங்கிரசுடன் இணைத்தார்.

இவர் பாட்டியாலா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தரம்வீர் காந்தி ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்