ராணுவ வீரர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம்: பிரதமர் மோடி
|ஒவ்வொரு இந்தியரும் ராணுவ வீரர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்திய ராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார்.
இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு இந்தியா தனது 75வது இராணுவ தினத்தைக் கொண்டாடுகிறது.
இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:- ராணுவ தினமான இன்று நமது நாட்டு ராணுவ வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் அனைவரும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நமது ராணுவத்தால் ஒவ்வொரு இந்தியனும் பெருமை அடைகிறான். நமது வீரர்களுக்கும் எப்போதும் நன்றிக் கடன் பட்டுள்ளோம். ராணுவ வீரர்கள் நமது தேசத்தை எப்போதும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். நெருக்கடியான நேரங்களில் ராணுவ வீரர்கள் சேவை பெரும் பாராட்டுக்கு உரியது" என்றார்.