50 வயசு ஆனாலும், 5 வயசு பையன்போல்... ராகுல் காந்தியை சாடிய சிவராஜ் சிங் சவுகான்
|கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், 50 வயசு ஆனாலும், ராகுல் காந்தி இன்னும் 5 வயசு பையன்போல் இருக்கிறார் என பேசியுள்ளார்.
போபால்,
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு, கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் சிகோடி நகரில் இன்று நடந்த பேரணி ஒன்றில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார்.
அவர் பேசும்போது, ராகுல் காந்திக்கு 50 வயது ஆகிவிட்டது. ஆனால், மனதளவில் அவர் இன்னும் 5 வயதுடையவர் போல் இருக்கிறார். கர்நாடகாவில் சர்ச்சைக்குரிய வகையில் மோடி பற்றி பேசினார்.
கோர்ட்டு தற்போது தண்டனை அளித்ததும் அவர் ஓடுகிறார். இதற்கு, பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு கூறுகிறார். என்ன கூற வேண்டும் என்றே அவருக்கு தெரியாது. வாக்குறுதிகளை கொடுக்க அவர் தகுதி வாய்ந்தவரா என்ன? என்று பேசியுள்ளார்.
2018-ம் ஆண்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலின்போது ராகுல் காந்தி, ஒவ்வொருவரின் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி வழங்கினார். ஆனால், 15 மாத கால காங்கிரஸ் ஆட்சியில் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.
வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கினார். ஆனால், ஒரு பைசா கூட அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று பேசியுள்ளார்.
அவர்கள் (காங்கிரஸ் கட்சி) தற்போது கர்நாடகாவுக்கு வந்து வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். இவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) பொய்யர்கள். அவர்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இல்லை என்று சவுகான் ஆவேசமுடன் பேசியுள்ளார்.