< Back
தேசிய செய்திகள்
நாய் கூட இதனை சாப்பிடாது... கண்ணீர் வடித்த போலீஸ் கான்ஸ்டபிள்; காரணம் என்ன?
தேசிய செய்திகள்

நாய் கூட இதனை சாப்பிடாது... கண்ணீர் வடித்த போலீஸ் கான்ஸ்டபிள்; காரணம் என்ன?

தினத்தந்தி
|
11 Aug 2022 8:03 AM GMT

உத்தர பிரதேசத்தில் போலீசாருக்கு வழங்கப்படும் தரமற்ற உணவுக்கு எதிராக கான்ஸ்டபிள் ஒருவர் கையில் தட்டுடன் கண்ணீர் விட்டபடி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலானது.

லக்னோ,



உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகரில் காவல் பணியில் ஈடுபட்டு விட்டு சாப்பிட வந்த மனோஜ் குமார் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் கையில் தட்டுடன் நடு வீதிக்கு வந்து திடீரென அழ தொடங்கினார். அவரை சுற்றியிருந்தவர்கள் என்ன, ஏது என்று பார்த்தனர்.

அவர் கண்ணீர் விட்டபடியே, போலீசாருக்கான இந்த மெஸ்சில் வழங்கப்படும் உணவை பாருங்கள். நீரோடிய பருப்பு குழம்பு, அரைகுறையாக சமைக்கப்பட்ட ரொட்டி எங்களை போன்ற போலீசாருக்கு வழங்கப்படுகிறது.

மூத்த போலீஸ் சூப்பிரெண்டு அதிகாரிகளிடம் பல முறை இதுபற்றி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 12 மணிநேரம் பணி முடிந்த பின்னர் அனைத்து போலீசாரும் இதனையே உணவாக உண்கின்றனர்.

இதனை ஒரு நாய் கூட சாப்பிடாது. நாங்கள் இந்த உணவை சாப்பிட முடியாது. எங்களது வயிற்றில் எதுவும் இல்லாதபோது, நாங்கள் எப்படி எங்களுடைய கடமைகளை செய்ய முடியும்? என கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசாருக்கு ஊட்டச்சத்து உணவு உறுதி செய்யப்படுவதற்காக அவர்களுக்கு அலவன்ஸ் தொகை அதிகரிக்கப்படும் என முதல்-மந்திரி யோகி அவர்கள் உறுதியளித்த போதிலும், தரம் குறைந்த உணவையே அவர்கள் வழங்குகின்றனர்.

இதற்கெல்லாம் மூத்த போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் டி.சி.பி.யின் ஊழலே காரணம். அவர்களாலேயே போலீசாருக்கு தரமற்ற உணவு வினியோகிக்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோஜ் புகார் அளித்ததும், மெஸ்சின் மேலாளர் பணியில் இருந்து நீக்கி விடுவேன் என மனோஜை மிரட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில், உணவு மற்றும் தனது போராட்டம் ஆகியவற்றை வீடியோவாக சமூக ஊடகத்தில் வெளியிடவும் மனோஜ் முடிவு செய்துள்ளார்.

அதன்பின்பே இந்த போராட்டத்தில் அவர் ஈடுபட்டு உள்ளார். இந்த வழியே கடந்து செல்லும் கேப்டன் சாரிடம் கூட பேசியுள்ளேன். இந்த தட்டில் உள்ள ரொட்டியை நீங்கள் சாப்பிட்டு பாருங்கள் என அவரிடம் கூறினேன். அவருக்கு தெரியும், அவரது போலீசார் என்ன சாப்பிடுகிறார்கள் என்று. அவருடைய குழந்தைகள் இதுபோன்ற உணவை சாப்பிடுவார்களா? என அவரிடம் கேட்க விரும்புகிறேன் என்று கண்ணீருடன் மனோஜ் கூறியுள்ளார்.

இவையெல்லாம் நடந்த பின்னர் சக போலீசார், அவரை அந்த பகுதியில் இருந்து அழைத்து சென்றனர். அவரது கண்ணீர் பேச்சு அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும், பிரோசாபாத் போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி வட்ட அதிகாரியிடம் கேட்டு கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்