இந்தியாவை விட ஐரோப்பிய யூனியன் கூடுதலாக 6 மடங்கு ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
|இந்தியாவை விட ரஷியாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் கச்சா எண்ணெய்யை 6 மடங்கு கூடுதலாக இறக்குமதி செய்துள்ளன என மத்திய மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னாலேனா பேயர்போக் இந்தியாவில் இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் தங்கிய பேயர்போக்குக்கு, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் விருந்தளித்துள்ளார்.
இன்றைய தினம் நடந்த இரு நாட்டு வெளியுறவு மந்திரிகளின் சந்திப்பில், நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை நடத்தப்படும். இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரம் மற்றும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி பணிகள் ஆகியவை தொடர்புடைய விரிவான விவகாரங்கள் பற்றிய ஆலோசனைகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, டெல்லியில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பை இன்று நடத்தினர். இதில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் உள்ளிட்ட பலதரப்பு விவகாரங்களை பற்றி பேசினோம் என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய மந்திரி ஜெய்சங்கர், கடந்த பிப்ரவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ரஷியாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் அதிக அளவில் எரிபொருள் வாங்கியுள்ளது. பிற 10 நாடுகள் இணைந்து வாங்கிய எரிபொருளை விட அது அதிகம்.
கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்த அளவை விட 6 மடங்கு கூடுதலாக ஐரோப்பிய யூனியன் இறக்குமதி செய்துள்ளது. எரிவாயு விவகாரத்தில் அது (ஐரோப்பிய யூனியன்) முடிவில்லாத அளவுக்கு வாங்கியுள்ளது.
ஏனெனில், எரிவாயுவை நாங்கள் இறக்குமதி செய்யவில்லை என கூறியுள்ளார். நீங்கள் இதற்காக உள்ள ரஷியாவின் எரிபொருள் பற்றிய கண்காணிப்புக்கான வலைதளத்தில் சென்று நீங்கள் ஆய்வு செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்.
அந்த வலைதளத்தில், என்ன என்னவற்றை, எந்தெந்த நாடுகள் எல்லாம் இறக்குமதி செய்துள்ளன என்பது பற்றிய விரிவான விவரங்கள் அடங்கியுள்ளன. அது மிக மிக உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.