சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தார், ஈசுவரப்பா
|கர்நாடக சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ள ஈசுவரப்பா, இன்று(செவ்வாய்க்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ள ஈசுவரப்பா, இன்று(செவ்வாய்க்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.
ஈசுவரப்பா ராஜினாமா
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் மந்திரிசபையில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் ஈசுவரப்பா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல், மந்திரி ஈசுவரப்பா 40 சதவீத கமிஷன் கேட்பதாக கூறி 'வாட்ஸ்-அப்'பில் தகவலை பதிவிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஈசுவரப்பா மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்று போலீசார் நற்சான்றிதழ் வழங்கினர்.
இதையடுத்து தனக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று ஈசுவரப்பா வலியுறுத்தி வருகிறார். ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறாததால் அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. அவர் 75 வயதை நெருங்கியுள்ளார். பா.ஜனதாவில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். அவர் குருபா சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.
புறக்கணித்துள்ளார்
இந்த நிலையில் பெலகாவியில் நேற்று தொடங்கியுள்ள சட்டசபையின் குளிா்கால கூட்டத்தொடரை அவர் புறக்கணித்துள்ளார். இதுகுறித்து அவர் சபாநாயகர் காகேரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த கூட்டத்தொடரில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்றும், கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க அனுமதிக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார். இந்த நிலையில் ஈசுவரப்பா பெங்களூருவில் இன்று(செவ்வாய்க்கிழமை) பத்திரிகையாளர்களின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.