திறந்தவெளி சிறைகளை அமைக்கலாம்- சுப்ரீம் கோர்ட்டு கருத்து
|சிறைகளில் நெரிசலை குறைப்பதற்காக நாடு முழுவதும் திறந்தவெளி சிறைகளை உருவாக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
புதுடெல்லி,
சிறைகள் மற்றும் கைதிகள் தொடர்பான ஒரு மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த மனு, நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
சிறைகளில் நெரிசலை குறைப்பதற்கான தீர்வுகளில் ஒன்று, திறந்தவெளி சிறைகள் மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைப்பது. இந்த நடைமுறை, ராஜஸ்தான் மாநிலத்தில் சிறப்பாக செயல்படுகிறது.இடநெருக்கடிக்கு தீர்வு காண்பதுடன் கைதிகளின் மறுவாழ்வு பிரச்சினைக்கும் இது தீர்வு காண்கிறது.
திறந்தவெளி சிறை நடைமுறையை நாடு முழுவதும் விரிவுபடுத்த விரும்புகிறோம். பாதி அளவோ அல்லது முழுமையாகவோ திறந்தவெளி சிறைகளை உருவாக்கலாம். பகல் நேரத்தில் கைதிகள் வெளியே சென்று வேலை செய்து வாழ்வாதாரத்துக்கு சம்பாதிக்கவும், மாலையில் சிறைக்கு திரும்பவும் ஏற்பாடு செய்யலாம்.
இதன்மூலம் கைதிகளை சமுதாயத்துடன் ஒருங்கிணைக்க செய்ய முடியும். சிறைக்கு வெளியே இயல்பு வாழ்க்கை நடத்துவதில் கைதிகள் சந்திக்கும் மன உளைச்சலை குறைக்க முடியும்.இருப்பினும், சிறை சீர்திருத்தங்கள் தொடர்பான விவகாரத்தை நாங்கள் தொட மாட்டோம். அதுதொடர்பான வழக்குகள் மற்ற அமர்வுகளில் நிலுவையில் உள்ளன. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தேசிய சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், திறந்தவெளி சிறை குறித்து மாநிலங்களிடம் கருத்து கேட்டதாகவும், 24 மாநிலங்கள் மட்டும் பதில் அளித்திருப்பதாகவும் கூறினார். அடுத்தகட்ட விசாரணையை மே 16-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.