காலரா பெருந்தொற்று பரவல்; ஜாம்பியாவுக்கு 3.5 டன் உதவி பொருட்களை அனுப்பியது இந்தியா
|காலரா தொற்றால், டயோரியா மற்றும் நீரிழப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
புதுடெல்லி,
ஜாம்பியா நாட்டில் காலரா வியாதி பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜனவரி 31-ந்தேதி வரை காலரா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,526 ஆக உள்ளது. 613 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இவற்றில் லுசாகா மாகாணத்தில் தொற்றுகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளன. அந்நாட்டில், மழைக்காலம் வருகிற மே மாதம் வரை இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாதிப்புகளும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கனமழையால் ஏற்பட கூடிய வெள்ளம், காலரா பரவலை அதிகரிக்க செய்யும். காலரா தொற்றால், டயோரியா மற்றும் நீரிழப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
இந்த சூழலில், ஜாம்பியா நாட்டுக்கு தேவையான நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், குளோரின் மாத்திரைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளடங்கிய 3.5 டன்கள் எடையிலான உதவி பொருட்கள் இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு 2-வது முறையாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவின் தூதர் வழியே ஜாம்பிய அரசிடம் நேற்று (சனிக்கிழமை) ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனை மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் அவருடைய எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தி உள்ளார்.
கடந்த 6-ந்தேதி இதேபோன்று முதல் முறையாக மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஜாம்பியாவில் காலரா பெருந்தொற்று பரவலால் 35 லட்சம் மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ளனர்.