பி.எப். வட்டி விகிதம் 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்வு
|நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் உயர்த்தப்பட்ட வட்டி, சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
புதுடெல்லி:
நாட்டின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), உறுப்பினர்களுக்கு பி.எப்., ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பலன்கள் வடிவில் சமூக பாதுகாப்பு நன்மைகளை வழங்குகிறது. தொழிலாளர்களின் வைப்பு நிதிக்கு, சர்வதேச நிலவரம் மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 2022-23 நிதியாண்டில் வட்டி விகிதம் 8.15 சதவீதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2023-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இறுதி முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் இன்றைய கூட்டத்தில் வட்டி அதிகரிப்பு குறித்த முடிவு எடுக்கப்பட்டது. நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் உயர்த்தப்பட்ட வட்டி சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வட்டி விகிதம் உயர்வு குறித்த தகவல் 6 கோடிக்கும் அதிகமான பி.எப். சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.