50 ஆயிரம் பேரிடம் கோடிக்கணக்கில் சுருட்டல்; நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு மோசடி அம்பலம்
|50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு மோசடியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அம்பலப்படுதுதி உள்ளனர்.
50 ஆயிரம் பேர்
உத்தரபிரதேசத்தின் அலிகாரை மையமாக கொண்டு ஒரு கும்பல் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்ததை ஒடிசாவின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.
இந்த கும்பல், அரசு வேலை வழங்குவதாக கூறி குஜராத், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியது தெரியவந்தது.
நாட்டின் மிகப்பெரிய இந்த வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், கும்பலை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இது அவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்துள்ளது.
என்ஜினீயர் கைது
எனினும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக இந்த கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஸபர் அகமது (வயது 25) என்பவரை தற்போது கைது செய்துள்ளனர். இவர் என்ஜினீயர் ஆவார். அலிகாரில் கைது செய்யப்பட்ட ஸபர் அகமது அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒடிசா கொண்டு சென்று விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, விசாரணைக்காக அவர் புவனேஸ்வர் கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
இந்த மோசடி தொடர்பான விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
புத்திசாலித்தனமான மோசடி
அதாவது மெத்த படித்த, தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களை கொண்ட இந்த மோசடி கும்பல், அரசு திட்டங்கள் பெயரில் மோசடியாக இணையதளங்களை உருவாக்கி வேலைதேடும் அப்பாவி இளைஞர்களை குறிவைத்து இந்த மோசடியை அரங்கேற்றி இருக்கின்றனர். இதற்காக போலியாக 'கால் சென்டர்களையும்' உருவாக்கி அதில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் பணியாளர்களை அமர்த்தி மிகவும் புத்திசாலித்தனமாக இந்த மோசடியை செய்துள்ளனர். இதற்காக 1000-க்கும் மேற்பட்ட போலி சிம் கார்டுகள், 530 செல்போன்கள் போன்றவற்றை பயன்படுத்தி உள்ளனர். விசாரணை அமைப்புகளிடம் சிக்காமல் இருப்பதற்கு வெறும் வாட்ஸ்அப் அழைப்புகளையே பயன்படுத்தி உள்ளனர்.
விளம்பம் செய்வர்
மேலும் ட்ரூ காலரில் அடையாளம் காண்பதை தடுக்க, தங்கள் வேலைவாய்ப்பு திட்டங்களின் பெயரிலேயே அவற்றை பதிவு செய்து வைத்திருந்தனர். இந்த சிம் கார்டுகள் அனைத்தும் அப்பாவி மக்களின் பெயரில் வாங்கப்பட்டவை என்பது கூடுதல் தகவல். தங்கள் இணையதளங்களில் வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிடும் இந்த கும்பல், அதன் மூலம் அப்பாவி இளைஞர்களுக்கு வலைவீசுவார்கள். சில நேரங்களில் உள்ளூர் செய்தித்தாள்களிலும் விளம்பரம் வரும். இதை நம்பி அவர்களை தொடர்பு கொள்ளும் இளைஞர்களிடம் முன்பதிவு மற்றும் நேர்முகத்தேர்வுக்காக பணம் வசூலிப்பார்கள். இளைஞர்கள் தங்களை நம்புவதை பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பணத்தை பிடுங்கி விடுவார்கள்.
இணையதளம் மூலம் வேலை
பின்னர் வேலைக்கு விண்ணப்பிக்கும் அனைவரையும் தேர்வு செய்து, தங்கள் இணையதளங்கள் வழியாக வேலை செய்ய கூறுவார்கள். அப்படியே அவர்களுக்கு வேலையும் வழங்கப்படும். ஆனால் சில நாட்களில் அந்த இணையதளம் முடங்கி விடும். அத்துடன் அந்த செல்போன் எண்களும் தொடர்பற்று போய்விடும். அப்போதுதான் அந்த அப்பாவி இளைஞர்கள் ஏமாந்து விட்டதை உணர்வார்கள். ஆனால் அந்த மோசடி மன்னர்கள் மட்டும் புதிய இணையதளம், புதிய சிம்கார்டுகள் மூலம் தங்கள் வேட்டையை தொடர்வார்கள்.
இவ்வாறு சுருட்டிய கோடிக்கணக்கான பணத்தில் ஆடம்பர வீடுகள், மனைகள் என இந்த கும்பல் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
இது இந்தியாவிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு மோசடியாக கருதப்படுகிறது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.