< Back
தேசிய செய்திகள்
மலாலி மசூதி பிரச்சினையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது உறுதி; கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார் பேட்டி
தேசிய செய்திகள்

மலாலி மசூதி பிரச்சினையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது உறுதி; கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார் பேட்டி

தினத்தந்தி
|
26 May 2022 8:53 PM IST

மலாலி மசூதி பிரச்சினையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது உறுதி என்று கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.

மங்களூரு;

கூடுதல் டி.ஜி.பி. ஆலோசனை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கஞ்சிமடா அருகே மலாலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மசூதியில் இந்து கோவில் இருந்ததற்கான தடயங்கள் உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து மசூதியில் நடந்து வந்த சீரமைப்பு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என பஜ்ரங்தள அமைப்பினர் மங்களூரு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை ஆணையும் பெற்றனர். இதற்கிடையே அங்கு பிரசன்னம் பார்த்ததால் மலாலி மசூதி விவகாரம் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதனால் மங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் நேற்று முன்தினம் விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார். பின்னர் மங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது உறுதி

மங்களூருவில் உள்ள மலாலி மசூதியில் இந்து கோவில் சம்பந்தப்பட்ட தடயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மசூதி வளாகத்தில் நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வளாகத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். மலாலி மசூதி பிரச்சினை தொடர்பாக அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாப்போம் என உறுதியளிக்கிறோம்.

அடுத்த ஓராண்டில் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெறும். அடுத்த ஓராண்டில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வரும் நாட்களில், அதிகாரிகளை சந்தித்து செயல் திட்டத்தை வகுப்பேன். அடுத்த ஓராண்டில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை கணித்து, அந்தத் திசையில் அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல்

தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டத்தில் மதரீதியான பதற்றம் நிலவி வருவதால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

மேலும், போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வரும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே அதனை தடுக்க கேரள காவல்துறையினருடன் இணைந்து இதுபோன்ற சட்டவிரோத வர்த்தகத்தை முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்