ஆதிக் அகமது சுட்டுக்கொலை: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள் - யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்
|உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது, சகோதரருடன் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் இந்த பயங்கரம் நடந்தது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் ஆதிக் அகமது. முன்னாள் எம்.பி.யான இவர் மீது, 2005-ம் ஆண்டு, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜு பால் மற்றும் கடந்த ஜனவரியில் நடந்த உமேஷ் பால் கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய, ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத், அவரது கூட்டாளி ஆகிய இருவரை கடந்த வியாழக்கிழமை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில் உமேஷ் பால் கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஆதிக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் நேற்று பிரயாக்ராஜுக்கு அழைத்துவரப்பட்டனர்.
அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்த அவர்கள் இருவர் மீதும், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதிக் அகமதுவும், அஷ்ரப்பும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குண்டுகளால் துளைக்கப்பட்ட அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் எடுத்துச்சென்றனர்.
இந்த என்கவுன்ட்டர் குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் பிரயாக்ராஜில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொல்லப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உயர்மட்டக் கூட்டத்தில் போலீசாருக்கு உ.பி. முதல்-மந்திரி அறிவுறுத்தி உள்ளார். மேலும் போலீஸ் அதிகாரிகளை, உஷாராக இருக்கவும், மாநிலத்தில் அமைதி, சட்டம், ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
சம்பவம் குறித்த வதந்திகளுக்கு கவனம் செலுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணைக்கும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி யோகி ஆதியநாத், டிஜிபி ஆர்.கே.விஸ்வகர்மா மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டி.ஜி., பிரசாந்த் குமார் ஆகியோருடம் ஆலோசனை நடத்தினார். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆதிக் மற்றும் அஷ்ரப் கொல்லப்பட்டது குறித்து முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.