< Back
தேசிய செய்திகள்
விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: கல்லூரி நிர்வாகம் தொல்லை?
தேசிய செய்திகள்

விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: கல்லூரி நிர்வாகம் தொல்லை?

தினத்தந்தி
|
18 May 2024 4:45 AM IST

கல்லூரி நிர்வாகம் மாணவி ஹர்ஷிதாவுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேயை சேர்ந்தவர் ஹர்ஷிதா (வயது 19). இவர், பெங்களூரு புறநகர் மாவட்டம் சந்தாபுரா அருகே சூர்யாநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கீலலகியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். கல்லூரியையொட்டி உள்ள விடுதியில் ஹர்ஷிதா தங்கி இருந்தார். அவருடன், மற்றொரு மாணவியும் உடன் தங்கி இருந்தார்.

அந்த மாணவி நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், விடுதி அறையில் தனியாக இருந்த மாணவி ஹர்ஷிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் பக்கத்து அறையில் தங்கி இருந்த மாணவிகள் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஹர்ஷிதா தூக்கில் தொங்குவது தெரியவந்தது. உடனே அவர்கள் கதவை உடைத்து மாணவியை மீட்க முயன்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்திருந்தார்.

இதுபற்றி சூர்யாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கல்லூரி நிர்வாகம் ஹர்ஷிதாவுக்கு தொல்லை கொடுத்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஹர்ஷிதாவின் தற்கொலைக்கான சரியான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

இதற்கிடையில், ஹர்ஷிதாவின் சாவுக்கு நியாயம் கேட்டு சக மாணவிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் திடீரென போராட்டம் நடத்தினார்கள். பின்னர் மாணவிகளிடம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் சமாதானமாக பேசி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சூர்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்