கல்லூரியின் 5-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
|போலீசார் விசாரணையில், ராகுல் நன்றாக படிக்க கூடிய மாணவர் என்று தெரிந்தது.
பெங்களூரு,
ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் ராகுல் (வயது 21). தற்போது ராகுல் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஓசூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-வது ஆண்டு படித்து வந்தார். கூட்லுகேட் பகுதியில் தங்கி இருந்து அவர் கல்லூரிக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் மாலையில் கல்லூரியின் 5-வது மாடிக்கு சென்ற ராகுல், திடீரென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில், தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராகுல் பரிதாபமாக இறந்து விட்டார். இதைபார்த்து சக மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுபற்றி பரப்பனஅக்ரஹாரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவர் ராகுல் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
விசாரணையில், அவர் நன்றாக படிக்க கூடிய மாணவர் என்று தெரிந்தது. நேற்று முன்தினம் காலையில் கல்லூரியில் நடந்த தேர்வை எழுதுவதற்கு ராகுல் தாமதமாக வந்துள்ளார். இதனால் ராகுலை பேராசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்து மாணவர் ராகுல் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.