< Back
தேசிய செய்திகள்
அமெரிக்க இளம்பெண் ரூ.5 லட்சம் மோசடி; என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
தேசிய செய்திகள்

அமெரிக்க இளம்பெண் ரூ.5 லட்சம் மோசடி; என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

தினத்தந்தி
|
26 Aug 2023 3:34 AM IST

முகநூலில் பழக்கமாக காதலிப்பதாக கூறி அமெரிக்க இளம்பெண் ரூ.5 லட்சம் மோசடி செய்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மண்டியா:

முகநூலில் பழக்கமாக காதலிப்பதாக கூறி அமெரிக்க இளம்பெண் ரூ.5 லட்சம் மோசடி செய்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முகநூலில் பழக்கம்

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா டவுன் பகுதியை சேர்ந்தவர் சண்முக் (வயது 20). இவர் பாண்டவபுராவில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் முகநூல் (பேஸ்புக்) மூலம் ஒரு பெண்ணுடன் சண்முக்கிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண், தான் அமெரிக்காவில் வசிப்பதாக கூறி பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.

இதனால் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண், தனக்கு அவசர தேவையாக பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.

தாயின் நகைகளை அடகு வைத்து...

இதையடுத்து சண்முக் தனது தாயின் நகைகளை எடுத்துச் சென்று அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தை அந்த பெண்ணுக்கு அனுப்பி வந்துள்ளார். இவ்வாறு அந்த பெண் ரூ.5 லட்சம் வரை சண்முக்கிடம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் சண்முக்கின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவரை கண்டித்துள்ளனர்.

இதையடுத்து சண்முக், அந்த பெண்ணிடம் தன்னிடம் வாங்கிய பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதன்பிறகு அந்த பெண் பணம் வழங்க மறுத்ததுடன் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சண்முக் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

போலீஸ் விசாரணை

நேற்று காலை, மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாண்டவபுரா போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்த மாணவர் சண்முக்கின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாண்டவபுரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸ் விசாரணையில், முகநூலில் பழக்கமாகி காதலிப்பதாக கூறி அமெரிக்க பெண் பணம் வாங்கி மோசடி செய்ததால், சண்முக் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்