< Back
தேசிய செய்திகள்
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு தேதியை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு தேதியை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
18 Oct 2022 4:52 AM IST

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை நவம்பர் 30 வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் செயலாளர் டி.புருசோத்தமன் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ந்தேதிதான் வெளியிடப்பட்டன. அதையடுத்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு தொடர்புடைய அட்டவணையை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1.56 லட்சம் மாணவர்களுக்கு 4 சுற்று கலந்தாய்வு நடத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நாட்கள் தேவைப்படுகின்றன.

அதன்படி சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் கலந்தாய்வு நடத்தமுடியாத நிலை உருவாகியுள்ளது. மாணவர்களின் நலன் கருதி, என்ஜினீயரிங் கலந்தாய்வு தேதியை நவம்பர் 25-ந்தேதி வரை நீட்டித்துக்கொள்ள அனுமதி வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இதுபோல பிற மாநிலங்களும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. அவற்றை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, மனுவில் தெரிவிக்கப்பட்டவற்றை எடுத்துரைத்தார்.

அதை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, என்ஜினீயரிங் கலந்தாய்வு தேதியை நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்