'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம்: பெண்களிடம் ஆபாச வீடியோ அனுப்ப சொல்லி ரசித்து பார்த்த என்ஜினீயர்
|வேறு ஒருவரின் கட்டுமஸ்தான புகைப்படத்தை காட்டி பழகிய பெண்களிடம் ஆபாச வீடியோ அனுப்ப சொல்லி ரசித்து பார்த்த என்ஜினீயர் கைதானார்.
சென்னை,
சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'இன்ஸ்டாகிராம்' மூலம் வாலிபர் ஒருவருடன் பழகினார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி அந்த பெண்ணும் ஆபாச வீடியோக்களை அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து வாலிபர் ஆபாச வீடியோ கேட்டதால் அதற்கு அந்த பெண் மறுத்தார். உடனே அந்த வாலிபர் ஏற்கனவே அனுப்பிய வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது பெற்றோர் மூலம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இளம்பெண்ணை ஆபாச வீடியோ கேட்டு மிரட்டியது சிதம்பரத்தை சேர்ந்த ஆனந்த்பாபு(வயது 25) என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான அவர், தற்போது சென்னை போரூரில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் தங்கி, அவர் நடத்தி வரும் எலெக்ட்ரானிக் கடையில் வேலை செய்து வருவதும் தெரிந்தது. போலீசார் ஆனந்த்பாபுவை கைது செய்து ஏழுகிணறு போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.
ஆபாச வீடியோக்கள் பார்ப்பதில் ஆனந்த்பாபு அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதற்காக 'இன்ஸ்டாகிராமில்' போலியாக வெவ்வேறு பெயர்களில் 3 கணக்குகளை தொடங்கினார்.
வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் இருந்து அவரது கட்டுமஸ்தான உடல் அமைப்பை கொண்ட புகைப்படத்தை எடுத்து தனது புகைப்படம் போல் பதிவிட்டு உள்ளார்.
அந்த கட்டுமஸ்தான புகைப்படத்தை பார்த்து அது ஆனந்த்பாபுதான் என நினைத்து, ஒரே நேரத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் அவருடன் தகவல் பரிமாற்றம் செய்து பழகி வந்தனர். அவர்களிடம் ஆனந்த்பாபு தனது முகத்தை காட்டாமலும், போனில் நேரடியாக பேசாமலும் வெறுமனே 'இன்ஸ்டாகிராம்' மற்றும் 'வாட்ஸ்அப்' மூலம் தகவல்களை பரிமாறி வந்துள்ளார்.
இதுபோல் தன்னுடன் 'இன்ஸ்டாகிராமில்' தொடர்பில் இருந்த பெண்களிடம் ஆனந்த்பாபு, இனிக்க இனிக்க பேசியும், அவர்களை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அவர்களை தனது வலையில் வீழ்த்தினார். அந்த பெண்களிடம் உங்கள் ஆபாச வீடியோக்களை 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி வைக்கும்படி கூறினார். அவரது பேச்சில் மயங்கி பெண்களும், அதுபோல் அனுப்பி வைக்க, அதனை அவ்வப்போது பார்த்து ரசித்து வந்துள்ளார்.
தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் அனுப்ப மறுத்தால் ஏற்கனவே அனுப்பிய ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவார். இதனால் பயந்து போன பலர், வேறு வழி தெரியாமல் அவர் சொன்னபடி ஆபாச வீடியோக்களை அனுப்பி உள்ளனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆனந்த்பாபுவின் செல்போனில் இதுபோல் 10-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான ஆனந்த்பாபுவை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.