காதலியை வழி அனுப்புவதற்காக போலி டிக்கெட்டுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த என்ஜினீயர் கைது
|காதலியை வழி அனுப்புவதற்காக போலி டிக்கெட்டுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. விமான நிலையத்திற்கு நேற்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரகர் ஸ்ரீவஸ்தவா (வயது 24) என்பவர் வந்தார். அவரிடம் இருந்த டிக்கெட்டை வாங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் பரிசோதனை செய்தார்கள். பின்னர் அவரை விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதித்தனர். அதன்படி, பிரகரும் விமான நிலையத்திற்குள் சென்றார்.
ஆனால் அவர், விமானத்தில் பயணம் மேற்கொள்ளாமல் சிறிது நேரத்தில் 9-வது கேட் வழியாக வெளியே வந்தார். அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, பிரகரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள். அப்போது செல்போனில் அவசர அழைப்பு வந்ததாகவும், அதனால் பயணத்தை ரத்து செய்துவிட்டு வெளியே செல்வதாகவும் பிரகர் தெரிவித்தார்.
ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் இருந்த டிக்கெட்டை வாங்கி மீண்டும் பரிசோதனை செய்தார்கள். அப்போது அந்த டிக்கெட் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து, பிரகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவர், பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
மேலும் தன்னை பார்க்க வந்த காதலியை டெல்லி செல்லும் விமானத்தில் வழி அனுப்பி வைப்பதற்காக வந்ததாகவும், விமான நிலையத்திற்குள் செல்வதற்காக போலி டிக்கெட்டை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பிரகர் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி டிக்கெட் மூலமாக பிரகர் உள்ளே நுழைந்த சம்பவம் பாதுகாப்பு குறைபாடுகளை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்திற்குள் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.