< Back
தேசிய செய்திகள்
ஜூலை 25-ந்தேதி தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்
தேசிய செய்திகள்

ஜூலை 25-ந்தேதி தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

தினத்தந்தி
|
21 July 2022 10:02 PM IST

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்ட் நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8 ஆம் தேதியன்று ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் விசாரணைக்கு ஆஜராவதில் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமெனக் கோரியிருந்தார்.

அதனை ஏற்று ஜூலை 21ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதன்படி சோனியா காந்தி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இன்று சுமார் 3 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் வரும் 25 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும் செய்திகள்