< Back
தேசிய செய்திகள்
நேஷனல் ஹெரால்டு கட்டிடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு சீல் - அமலாக்கத்துறை அதிரடி
தேசிய செய்திகள்

நேஷனல் ஹெரால்டு கட்டிடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு சீல் - அமலாக்கத்துறை அதிரடி

தினத்தந்தி
|
3 Aug 2022 6:27 PM IST

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.

புதுடெல்லி,

நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு சுதந்திரத்துக்கு முன்பாக தொடங்கிய பத்திரிகைதான் 'நேஷனல் ஹெரால்டு'. இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி அளித்த வட்டியில்லா கடன் ரூ.90 கோடியை அந்த நிறுவனம் திரும்பத்தரவில்லை.

இதன் காரணமாக அந்த பத்திரிகையை வெளியிட்டு வந்த 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள 'யங் இந்தியா' நிறுவனம் கைப்பற்றியது. இதனால் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துகளை 'யங் இந்தியா' அபகரித்துவிட்டது என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்து அது டெல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கருதி அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களிடம் அமலாக்கத்துறை பல நாட்கள் விசாரணை நடத்தியது.

இந்த சூழலில் நேற்று அதிரடியாக டெல்லியில் ஐ.டி.ஓ. பகுதியில் பகதூர் ஷா ஜப்பார் மார்க்கில் உள்ள 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை அலுவலகம், அதனுடன் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான கூடுதல் ஆதாரங்களை திரட்டுவதற்காக சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் இந்த சோதனைகள் நடைபெற்றன.

இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு கட்டிடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அமலாக்கத்துறை அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரது இல்லத்திற்கு முன் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்

மேலும் செய்திகள்