அமலாக்கத்துறை யாரையும் பழிவாங்க பயன்படுத்தப்படவில்லை - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
|அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமானது, அது யாரையும் பழிவாங்குவதற்கு பயன்படுத்தப்படவில்லை என்று அமெரிக்காவில் நிருபர்களிடம் பேசிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வாஷிங்டன்,
சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றார். அந்தக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு, தனது பயணத்தின் நிறைவில் அவர் வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமானது. அது யாரையும் பழிவாங்க பயன்படுத்தப்படுவதில்லை. கண்டுபிடிக்கப்பட்ட குற்றங்களை அது பின்தொடருகிற புலனாய்வு அமைப்பாக செயல்படுகிறது. முதலில் குற்றத்தை மற்றொரு அமைப்பு (சி.பி.ஐ. அல்லது மற்றவை) கண்டுபிடிக்கிறது. அதன் பின்னர்தான் அங்கே அமலாக்கத்துறை களத்தில் இறங்குகிறது.
சரியான தகவல்கள், ஆதாரங்கள் கிடைத்த பின்னர்தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது. எங்கேயும் அது முதலில் களத்தில் இறங்குவதில்லை. தனிப்பட்ட வழக்கு அல்லது அணுகுமுறை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாக அமலாக்கத்துறை செல்கிறது என்றால், அதன் கையில் அடிப்படை ஆதாரம் இருக்கிறது என்றே எடுத்துக்கொள்ளலாம்.
கிரிப்டோகரன்சி
நாம் அடுத்த ஆண்டு 'ஜி-20' அமைப்பின் தலைமை பொறுப்புக்கு வரும்போது, கிரிப்டோகரன்சி (பிட் காயின் போன்ற டிஜிட்டல் வடிவ நாணயம்) தொடர்பான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை உருவாக்கும் நோக்கம், இந்தியாவிடம் உள்ளது.
எந்த ஒரு தனிநாடும், கிரிப்டோகரன்சியை திறம்பட கையாளவோ, ஒழுங்குபடுத்தவோ முடியாது. ஆனால் இதில் உள்ள மறைமுகம், தொழில்நுட்பம். இதில் தொந்தரவு செய்வதை நாங்கள் விரும்பவில்லை. தொழில்நுட்பம் உயிர் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நிதி தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகள் அதில் இருந்து பயன் அடையும் நிலையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
இந்தியாவில் பணவீக்கம், சமாளிக்கக்கூடிய அளவில்தான் இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது. பெரும்பொருளாதார அடிப்படைகள் நன்றாக உள்ளன. அன்னியச் செலாவணி கையிருப்பு நன்றாக இருக்கிறது.
நான் மீண்டும் மீண்டும் சொல்வது, பணவீக்கம் சமாளிக்கக்கூடிய அளவில் இருக்கிறது என்பதுதான்.
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறதே என்று கேட்கிறீர்கள். டாலரின் மதிப்பு நன்கு உயர்ந்துள்ளது. அதற்கு எதிராக இன்ன பிற நாணயங்கள் செயல்படுகின்றன. நான் தொழில்நுட்ப ரீதியில் பேசவில்லை. ஆனால், டாலர் மதிப்பு உயர்வதற்கு ஏற்ப இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே இருக்கிறது.
நாணயச்சந்தையில் பிற நாடுகளின் நாணய மதிப்பை விட இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வாகவே இருக்கிறது.
ரூபாயின் மதிப்பை சரி செய்வதற்கு சந்தையில் தலையிட இயலாது. ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்தும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது. நான் ஏற்கனவே கூறியபடி, ரூபாய் அதற்கான இடத்தை கண்டுபிடித்து விடும்.
வர்த்தக பற்றாக்குறை
வர்த்தக பற்றாக்குறை வளர்ந்து கொண்டே போகிறது. ஆமாம். நாம் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக செய்கிறோம். ஆனால் ஏதேனும் ஒரு நாட்டுடன் ஒப்பிடுகையில் இது விகிதாசார அடிப்படையில் அதிகரித்து இருக்கிறதா என்பதை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்.
நமது இறக்குமதிகளை பார்த்தீர்களேயானால், இறுதி உபயோகப்பொருட்கள் குறைவு. இடைநிலைப்பொருட்கள் அதிகம். இறக்குமதிகளில் நான் கச்சாப்பொருட்கள், இடைநிலைப்பொருட்களை கூடுதலாக பார்க்கிறபோது, அது மதிப்பு கூட்டிய பொருட்கள் மற்றும் ஏற்றுமதிகளுக்கு நல்ல வாய்ப்பை கொண்டுள்ளன.
எனவே இந்த நிகர பற்றாக்குறையைப் பொறுத்தமட்டில் நான் உடனடியாக கவலைப்பட விரும்பவில்லை. நாம் இறக்குமதி செய்கிற பொருட்களைப் பார்த்தால், அவை அத்யாவசியமானவை. நமது தொழில்துறைக்கு தேவையானவை. ஏற்றுமதிக்கான மதிப்புகூட்டிய பொருட்களுக்கு அவை தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.