டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சென்னை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
|கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக ஐதராபாத், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சோதனை நடந்து வருகிறது.
புதுடெல்லி,
டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டெல்லியில் மீண்டும் பழைய மது பான கொள்கை அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி துணை முதல் மந்தரி மணிஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் டெல்லியில் பெரும் புயலை கிளப்பி உள்ள நிலையில், இன்று மீண்டும் டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது. ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சோதனை நடந்து வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள 40 இடங்களில் அமலாக்கத்துறை இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது.நெல்லூர் மற்றும் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் டெல்லி-என்சிஆர் ஆகிய நகரங்களில் உள்ள மதுபான வணிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விநியோகச் சங்கிலி நெட்வொர்க்குகளுடன் தொடர்புடைய வளாகங்களில் சோதனை நடந்து வருகிறது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில், கடந்த 6ம் தேதி டெல்லி மற்றும் உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, தெலுங்கானா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலஙகளின் பல நகரங்களில் அமலாக்கத்துறை இயக்குனரகம் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.