அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவு; டெல்லி கோர்ட்டில் ஆஜரானார் கெஜ்ரிவால்
|டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
புதுடெல்லி,
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். தொடர்ந்து 22-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலை 28-ந்தேதி(இன்று) வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இன்றோடு கெஜ்ரிவாலின் காவல் முடிவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் ஆஜராவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "இது ஒரு அரசியல் சூழ்ச்சி, இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள்" என்று தெரிவித்தார்.