அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
|இதுவரை அமலாக்கத்துறை அனுப்பிய அனைத்து சம்மன்களும் சட்ட விரோதமானது என அரவிந்த் ஜெரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை 6 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அமலாக்கத்துறை அரவிந்த் ஜெரிவாலுக்கு 7 வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனுக்கு அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்தார்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அடுத்த விசாரணை மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது. தினமும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும். இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம். மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை உருவாக்கக் கூடாது" என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது 8-வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 4-ம் தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை அமலாக்கத்துறை அனுப்பிய அனைத்து சம்மன்களும் சட்ட விரோதமானது என அரவிந்த் ஜெரிவால் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.